கோயம்புத்தூர்: இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் நிலையில், மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இந்தியா கூட்டணி கோவை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளரான கணபதி ராஜ்குமார், இன்று (ஏப்.1) மணியகாரம்பாளையம் பகுதிக்குட்பட்ட காந்தி மாநகரில் பிரச்சாரத்தைத் துவங்கினார். அப்போது வீதி வீதியாகச் சென்று வாக்குகளைச் சேகரித்த அவர், அப்பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்களிடமும் வாக்குகளைச் சேகரித்தார்.
அப்போது, வங்கிக்கணக்கில் மாதாமாதம் கலைஞர் உரிமத்தொகை ஆயிரம் ரூபாய் வருவதாகவும், இலவச பேருந்தால் கட்டணம் இன்றி பயணிப்பதாகவும் தெரிவித்த தூய்மை பணியாளர்கள், மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு தேவையானவற்றை வழங்கி வருவதுடன், தகுந்த பாதுகாப்பை அளித்து வருவதாகவும் கூறினர். மேலும், தங்கள் ஓட்டு உதயசூரியனுக்கே என வேட்பாளரிடம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, பிரச்சாரம் மேற்கொண்ட வேட்பாளர் கணபதி ராஜ்குமார், "இந்த நாடாளுமன்றத் தேர்தலை, ஒரு முக்கியமான தேர்தலாகப் பார்க்க வேண்டும். இந்தியாவே உற்றுநோக்கும் ஒரு தொகுதியாக, நமது கோவை மக்களவைத் தொகுதி அமைந்திருக்கிறது. பல இடர்பாடுகளுக்கு நடுவே, நிதி நெருக்கடியின் நடுவே பல சிறந்த திட்டங்களை மகளிருக்கும், பொது மக்களுக்கும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய ஒரே அரசாங்கம் திமுக தான்.
அதனால் தான், இன்றைக்கு இந்தியாவிலேயே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் மாநிலமாக, தமிழ்நாடு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, விலை உயர்வைத் தவிர நமக்கு வேறு எதையும் கொடுத்தது கிடையாது. கேஸ் விலை, பெட்ரோல் விலை என அனைத்தும் ஏறிக்கொண்டே போகிறது. இப்படி இருக்க, நிறைய நலத்திட்டங்களைச் செய்தது போல, வாக்கு சேகரிக்க வருவார்கள்.
ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் செலுத்துவதாகப் பிரதமர் மோடி வாக்குறுதி கொடுத்தார். அந்த வாக்குறுதிகள் எல்லாம் என்ன ஆனது? என நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். அதிமுகவைப் பொறுத்த வரை, அவர்களுக்குப் பிரதமர் வேட்பாளர் கிடையாது. பாஜகவும், அதிமுகவும் தனித்தனியாக இருப்பது போலத் தெரிந்தாலும், பிற்காலத்தில் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.
இனி வரும் காலத்தில் இந்த விலைவாசி உயர்வைத் தடுத்திடவும், ஜிஎஸ்டி பிரச்சனைகளை எல்லாம் எடுத்துச் சொல்லவும், நாடாளுமன்றத்தில் இந்த தொகுதியின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். அதனால் தான் நீங்கள் அனைவரும் ஒருமித்த குரலிலே, திமுகவிற்குப் பெருவாரியான ஆதரவைக் கொடுக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் வெற்றி பெற இந்த 3 நபர்களே போதும்.. காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு கைகாட்டியது யாரை? - Senior Congress Leader Thangabalu