திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம், தண்ணீர்குளம் பகுதியைச் சேர்ந்த மாரி என்பவரது மகன் மகாலிங்கம். ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வரும் இவருக்கு கலையரசி எனும் மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். இதில் மகாலிங்கத்தின் மூத்த மகனுக்கு நீண்ட நாட்களாக இருதய பிரச்னை மற்றும் சுவாசக்கோளாறு இருந்து வருகிறது.
வீட்டுக் குழாய் நீரில் கழிவு நீர் கலந்து வருவதால் இந்த பிரச்னை இருக்கலாம் என்ற எண்ணத்தில், இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் தேவிகா என்பவரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அந்தப் புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மகாலிங்கம் திருவள்ளூர் பிடிஓ அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இது குறித்த தகவல் அறிந்த ஊராட்சி மன்றத் தலைவர் தேவிகாவின் கணவரும், திமுக கிளைச் செயலாளருமான தயாளன் மற்றும் அவரது உறவினர்கள், மகாலிங்கத்தின் வீட்டிற்கு வந்து தகாத வார்த்தைகளால் அவரை திட்டி, கொலை மிரட்டல் விட்டுச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, மகாலிங்கம் வசிக்கும் தெருவில் 12 அடி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்த போது, சாலையை உயர்த்தி போடச் சொல்லி ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் தயாளன் தெரிவித்துள்ளார். அதனால் மகாலிங்கத்தின் ஆட்டோ சாலையிலிருந்து அவரது வீட்டுக்கு இறங்காதபடி உயரமாக சாலை அமைத்துள்ளனர்.
இது குறித்து மகாலிங்கம் தயாளனிடம் சென்று கேட்டபோது, தகாத வார்த்தைகளால் பேசியதோடு, மகாலிங்கத்தின் கை தோள்பட்டையைப் பிடித்து கடித்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இதனையடுத்து மகாலிங்கம், தயாளனின் காதை கடித்துள்ளார், இதில் அவரது காது துண்டாகியுள்ளது. இதையடுத்து, உடனடியாக மகாலிங்கம் காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
ஆனால், போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தயாளனின் உறவினர்கள் 16 பேரும் மகாலிங்கத்தை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து மகாலிங்கம் செவ்வாப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரை எடுக்காமல், அவரை அலைக்கழித்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும் தயாளனை தாக்கியதற்காக மகாலிங்கத்தை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 21 நாள் கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் இருந்து வெளியே வந்த மகாலிங்கம், காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார். அப்போது, மீண்டும் மகாலிங்கம் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி தயாளன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், “என் மீது மீண்டும் புகார் கொடுக்கிறாயா?” என கேட்டு, தயாளனின் உறவினர்கள் 16 பேர், அடையாளம் தெரியாத அடியாட்கள் மூன்று பேர் உட்பட 19 பேர் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி மகாலிங்கத்தின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, மகாலிங்கத்தின் மூத்த மகனின் கழுத்தில் கத்தியை வைத்து, மகாலிங்கத்தின் காதை அறுத்துள்ளனர். தடுக்க வந்த அவரது மனைவி கலையரசி மற்றும் தந்தை மாரி ஆகியோரையும் சரமாரியாக அந்த கும்பல் தாக்கியுள்ளது.
இதனையடுத்து பலத்த காயங்களுடன் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடும்பத்தினர் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு முதல் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.
வீடு திரும்பிய குடும்பத்தினர் தண்ணீர் குளம் கிராமத்திற்கு மீண்டும் வந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் அங்கு செல்லாமல், மனைவி கலையரசியின் தாய் வீட்டிற்குச் சென்று அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த வழக்கில் வீடு புகுந்து தாக்கிய கிட்டத்தட்ட 19 பேரில் ரவிசங்கர் (27), விஜயராஜ் ( 26) ஆகிய இரண்டு பேர் மட்டுமே காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
வாய்த்தகராறில் மகாலிங்கத்தின் தோள்பட்டையை கடித்ததோடு கொலைவெறி தாக்குதல் நடத்தியதாலேயே, தயாளனின் காதை மகாலிங்கம் கடித்த நிலையில், அதற்காக மகாலிங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்த போலீசார், தயாளன் குடும்பத்தார் வீடு புகுந்து தாக்கிய வழக்கில், திமுக கிளைச் செயலாளர் என்ற ஒரே காரணத்திற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யாமலும், கைது செய்யாமலும் செவ்வாப்பேட்டை போலீசார் அலட்சியம் காட்டுவதாக மகாலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.
இது வருத்தம் அளிப்பதாக தெரிவித்த அவர், இந்த நிலை மேலும் தொடராமல் இருக்க உடனடியாக அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.