திருவண்ணாமலை: உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மாதா மாதம் பௌர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்களும், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் வந்து செல்கின்றனர்.
அதோடு மட்டுமில்லாமல் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தினந்தோறும் 24 மணி நேரமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள கிரிவலப் பாதையில் கிரிவலம் நடந்து சென்று, அருணாசலேஸ்வரரை வழிபட்டுச் செல்கின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கிரிவலம் வரக்கூடிய பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறதா என்பது குறித்து சைக்கிளில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது, அருணாசலேஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம் முன்பு, நகர மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறை உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டார். கழிவறை மற்றும் ஒப்பனை அறை சுகாதாரமற்ற முறையில் அசுத்தமாக இருப்பதைக் கண்டு ஒப்பந்தத்தை நீக்க உத்தரவிட்டார். பேருந்தில் வரும் பெரும்பாலானோர் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிவறையையே பயன்படுத்துகின்றனர்.
அப்படி இருக்க, பயன்படுத்தக்கூடிய கழிவறை சுத்தம் செய்யாமல் சுகாதாரமற்ற முறையில் டோக்கன் வழங்காமல் கட்டண கழிப்பிடம் செயல்படுவதையும், ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி இருப்பதையும் கண்டு அதிருப்தி அடைந்த மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையரை உடனடியாக தொடர்பு கொண்டு, முறையாக பராமரிக்கப்படாமல் டோக்கன் வழங்காமல் வசூல் செய்த கட்டண கழிப்பிட ஒப்பந்தத்தை ரத்து செய்ய பரிந்துரைத்தார். மாவட்ட ஆட்சியரின் இந்த திடீர் ஆய்வால் நகர மத்திய பேருந்து நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு புது வாழ்வு கொடுத்த தருமபுரி அரசு மருத்துவமனை! - mentally challenged person recover