சென்னை: சமீபத்தில் மாமல்லபுரம் - காரைக்கால் அருகே புதுச்சேரியில் கரையை கடந்த பெஞ்சல் புயல் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இதில் பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகங்களும் அடித்துச் செல்லப்பட்டன. இந்தநிலையில் பாடப்புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்குவதற்கான கணக்கெடுப்புகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டது.
முன்னதாக தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9ந் தேதி முதல் 23ந் தேதி வரையில் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தேர்வு அட்டவணையை வெளியிட்டது. மேலும் அரையாண்டு விடுமுறைக் காலம் 24.12.2024 முதல் 1.1.2025 வரை அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் பெஞ்சால் புயல் காரணமாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆகிய மாவட்டங்களில் மட்டும் அரையாண்டுத் தேர்வுகளை 2025 ஜனவரி 2ந் தேதி முதல் 10ந் தேதி வரையில் நடத்திட சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே பள்ளிக்கல்வித்துறை நடத்திய ஆய்வில் 6 முதல் 12ம் வகுப்பு வரை, 5 ஆயிரத்து 312 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் வெள்ளத்தில் ஆயிரத்து 568 மாணவர்கள், ஆயிரத்து 332 மாணவிகளுக்குமான சீருடைகளும் அடித்துச் செல்லப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
மாணவர்களுக்கான புத்தகப் பைகளை 2 ஆயிரத்து 567 அடித்துச் செல்லப்பட்டதும், 3,219 மாணவர்களுக்கான நோட்டுப் புத்தகங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பள்ளி திறக்கப்பட்டதை தொடர்ந்து. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சீருடைகள், நோட்டு புத்தகங்கள், பாடப் புத்தகங்கள் அனைத்தும் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறந்த உடன் பாடப்புத்தகங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாகவும், மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!