கடலூர்: 18வது மக்களவைத் தேர்தலில் கடலூர் தொகுதியில் பாமக சார்பில் இயக்குநர் தங்கர் பச்சான் போட்டியிட்டு 2 லட்சத்து 5 ஆயிரத்து 244 வாக்குகள் பெற்று 3வது இடம் பிடித்தார். அதாவது மொத்தம் பதிவான வாக்குகளில் 19.9 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இதனையடுத்து. கடலூர் நாடளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்காளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்து வருகிறார். அந்த வகையில் இன்று நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காடாம்புலியூர், சந்திரம், முத்தாண்டிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அங்கு உள்ள மக்களிடம் நன்றிக்கான துண்டு பிரசுரங்களை விநியோகித்தார். பின்னர் பிரச்சார வாகனத்தில் ஏறி வீதி வீதியாக சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் தங்கர் பச்சான் கூறுகையில், "40 தொகுதிகளில் திமுக வென்று இருந்தாலும் இந்த முறையாவது மக்கள் பணிகளுக்காக அதனை பயன்படுத்த வேண்டும்.
கடந்த முறை 38 எம்பிக்களை கையில் வைத்திருந்தபோதும் நாடாளுமன்றத்தில் பெரும்பாலான நேரங்களில் வெளிநடப்பு மட்டுமே செய்தார்கள். ஆக்கப்பூர்வமான பணிகள் எதையும் மேற்கொள்ளவில்லை. கரூர் பேருந்து நிலையத்தில் தனியாக நின்ற பெண்ணிடம் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட நபரைக் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மதுவால் ஏற்படும் இவ்விதமான பிரச்சனைகளை தடுத்து நிறுத்த வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துகிறோம் என்று சொன்ன திமுக, டாஸ்மார்க் கடைகளைக் கூட்டுக் கொண்டே செல்கின்றது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக-வை கண்டு மற்ற கட்சிகளுக்குப் பயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திமுகவின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது உங்களுக்கே புரியும். ஏறக்குறைய ஒரு மாத காலம் அரசாங்கம் முடங்கப்போகிறது.
ஒரு சிறிய சட்டமன்றத் தொகுதிக்கு அனைத்து அமைச்சர்களும் அங்கே களம் இறங்கப்படுகிறார்கள். எந்த இடைத்தேர்தலானாலும் அதில் ஆளும் கட்சியை மீறி ஒன்றும் நடக்கப் போவதில்லை. அவை அனைத்திற்கும் பாமக தயாராகத்தான் இருக்கிறது.
பாமகவின் சக்தியை பார்த்துத்தான் அதிமுக விலகிவிட்டது. எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக இன்றைக்கு என்ன நிலைமையில் உள்ளது. இந்த இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் அனைத்தும் பாமகவிற்குதான் வரப்போகிறது." என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுகவுக்கும், அந்தம்மாவுக்கு சம்பந்தம் இல்லை: சசிகலாவுக்கு ஈபிஎஸ் பதிலடி!