சென்னை: சென்னை அண்ணா நகரில் வசித்து வருபவர் ரிஷி. இவர் மணலி புதுநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு 20 ஏக்கர் நிலம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஷகிலா என்பவர், இதில் 1.5 ஏக்கர் நிலம் என்னுடையது, எனது உறவினர்கள் எனக்கு தெரியாமல் நிலத்தை விற்றுள்ளனர் என்று உரிமை கோரியுள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில், இன்று காலை ஷகிலா என்பவர், தமிழ் சினிமா பிரபல இயக்குநர் பா.ரஞ்சித்தின் அண்ணன் பிரபு உதவியுடன் அடியாட்களை அழைத்து வந்துள்ளதாக தெரிகிறது. இதில், இருதரப்பினரிடையில் பஞ்சாயத்து நடந்துள்ளது. ஆனால், இவர்களுக்கிடையில் வாக்குவாதம் முற்றிய நிலையில், பா.ரஞ்சித் சகோதரர் உடன் வந்த நபர்கள், தொழிலதிபர் இடத்தில் இருக்கக்கூடிய சிசிடிவி கேமராக்களை கற்களைக் கொண்டு தாக்கி அடித்து உடைத்து, அங்குள்ள காவலாளி தொலைபேசியைப் பிடுங்கி வைத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக ரிஷி மணலி புதுநகர் காவல் நிலையத்தில் ரஞ்சித்தின் சகோதரர் பிரபு, அவருடன் சென்ற வழக்கறிஞர்கள் மீது புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், “ தமிழ் சினிமா இயக்குநர் பா.ரஞ்சித்தின் அண்ணன் பிரபு ஆட்களை, ஷகிலா என்பவர் கூட்டிக் கொண்டு வந்து அநாகரிகமான செயலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “என்னைப் பற்றி பிறர் பேசுவதில் நான் கவனம் செலுத்துவதில்லை” - இளையராஜா! - Ilayaraja Vs Vairamuthu