தஞ்சாவூர்: அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாக அமையப் பெற்றுள்ள கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலையில், இந்து மக்கள் கட்சி சார்பில் முருக பகதர்களின் சூரசம்ஹார மாநாடு இன்று (ஜூலை 21) நடைபெற்றது. இந்நிகழ்வில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், திரைப்பட இயக்குநர் மோகன் ஜி, நடிகர்கள் வையாபுரி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் இயக்குநர் மோகன் ஜி பேசுகையில், "பழனியில் இருப்பது முருகனின் சிலை இல்லை, போகர் சிலை என சுகி சிவம் கூறுகிறார். தனக்கு தானே சிலை வைத்துக் கொள்ள போகர் ஒன்றும் அரசியல்வாதி இல்லை. நாத்திகர்களால் நமக்கு பிரச்னையில்லை, அவர்கள் இருக்க வேண்டும். அவர்களை மதிக்க வேண்டும். ஆனால், ஆத்திகம் பேசிக் கொண்டு நாத்தியவாதியாக மாறுபவர்களை விட்டு வைக்கக்கூடாது. அவர்கள் துரோகிகள்.
சுவாமிமலையில் இன்று நடைபெறுவதைப் போல பல சூரசம்ஹார மாநாடுகளை இந்து மக்கள் கட்சி நடத்திட வேண்டும். இம்மாநாடு ஆகஸ்ட் மாதம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கிறது" என்றார்.
அதனைத் தொடர்ந்து, இம்மாநாட்டில் முருகக்கடவுள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை கூறி, குழப்பங்களை ஏற்படுத்தும் சுகி சிவம் மற்றும் மங்கையர்கரசி போன்றவர்களை இம்மாநாட்டில் பங்கேற்க செய்ய கூடாது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் டிசம்பர் 6ஆம் தேதி, இதே போன்ற 2வது சூரம்ஹார மாநாடு நடத்திட இந்து மக்கள் கட்சி ஏற்பாடு செய்து வருகிறது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டிற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜுன் சம்பத், தமிழும் முருகனும் வேறு வேறு அல்ல. தமிழையும், முருகனையும் பிரித்து பார்க்க முடியாது என்றும், தமிழ் ஒரு ஆன்மீக மொழி என்றும், முருக கடவுளை முப்பாட்டன் என்று மனிதர்களோடு ஒப்பிடும் செயலையும், முருகக்கடவுளை இழிவுபடுத்தும் விதமாகவும், அவமதிக்கும் விதமாகவும் திரைப்படங்கள் எடுப்பதை கண்டிக்கிறோம் என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “திருப்புகழ், கந்தபுராணம் குறித்து பள்ளி மாணவர்களின் பாடத் திட்டங்களில் சேர்க்க வேண்டும். திருப்பதிக்கு நிகராக அறுபடை வீடுகளை மேம்படுத்த வேண்டும். திருச்செந்தூர் கோயிலை ஹெச்சிஎல் ஷிவ் நாடார் (Shiv Nadar) ரூபாய் 250 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தியதை போல, இந்துசமய அறநிலையத்துறை பிற அறுபடை தலங்களிலும் இதே போன்ற தரம் உயர்த்தும் செயல்களை முன்னெடுக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. இது குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அரசிற்கு அறிக்கை அளிக்க வேண்டும். மத்திய உள்துறை அமைச்சகமும், மத்திய குழு ஒன்றை அனுப்பி தமிழக சட்டம் ஒழுங்கு நிலையை ஆராய வேண்டும். மின்கட்டண உயர்வு கண்டிக்கதக்கது. இதற்காக இந்து மக்கள் கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும்" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலினின் பதவி குறித்து கனிமொழி பதில்! - Periyar Vision OTT