திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள இரண்டு அலகுகளில், தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு அணுமின் நிலையம் அமைப்பதற்கு முன்பே, உள்ளூர் மக்களுக்கு பல்வேறு உறுதிமொழி அளிக்கப்பட்டது.
குறிப்பாக, 1999ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சி-பிரிவு பணியாளர்களுக்கான தேர்வில், உள்ளூர் இளைஞர்களை நியமிக்க வேண்டும். அதேபோல், அணுமின் நிலையத்திற்காக நிலம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை (மார்ச் 3) கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சி-பிரிவு பணியாளர்களுக்கான தேர்வு நடைபெறுவதாகவும், அதில் உள்ளூர் மக்கள் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரும், ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு, இந்திய அணு சக்தி துறைக்கு அவசரக் கடிதம் அனுப்பினார்.
அந்த கடிதத்தில் அவர், ஒப்பந்தப்படி தேர்வு நடத்தாமல் சட்டத்திற்குப் புறம்பாக நடைபெறும் தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி இருந்தார். இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக இன்று (மார்ச் 2) கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், நிலம் வழங்கியவர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், நாளை (மார்ச் 3) நடைபெறும் தேர்வை ரத்து செய்யக் கோரி, கூடங்களும் அணுமின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.
இது போன்ற சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக இன்று விளக்கம் அளித்துள்ள கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.ஷாவந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர்களுக்கான குருப்-சி பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு தேர்வுகள் நாளைநடைபெறும் என்ற தவறான செய்தி பரவி வருகிறது. நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ள தேர்வு குரூப்-பி தேர்வுகள் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுக - விசிக இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி.. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ரத்து!