சென்னை: இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற தலைப்பில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அப்படி சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வன பத்ரகாளி அம்மன் கோயில் ஆற்றில் குளிக்க வரும் பக்தர்களை ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்து அந்த உடலை மறைத்து வைத்து பிறகு அந்த உடலைக் கண்டுபிடிக்க உதவுவது போல ஒரு கும்பல் பணம் சம்பாதித்து வருவதாகத் தெரிவித்திருந்தார்.
இது பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாக்யராஜின் இந்த வீடியோ பதிவிற்கு, கோவை மாவட்ட காவல்துறை சார்பில் வீடியோவில் குறிப்பிட்டிருந்த செய்தி அடிப்படை ஆதாரமற்ற வதந்தி என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது இயக்குநர் பாக்யராஜ் அந்த அறிக்கைக்கு விளக்கம் அளித்து புதிய வீடியோ ஒன்றைத் தனது 'X' வலைதளத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், "நான் நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற வீடியோ பதிவின் மூலமாக காவல்துறையை எந்த ஒரு இடத்திலும் குறை கூறி தவறாகச் சொல்லவில்லை. ஒரு தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த வீடியோவை பதிவு செய்கிறேன். நான் அந்த காலகட்டங்களில் படப்பிடிப்பிற்குச் செல்லும் போது, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள மக்களால் நான் கேள்விபட்ட விஷயத்தையே வீடியோவில் தெரிவித்தேன்.
ஆனால், சமீபத்தில் உயிரிழந்த சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மரணத்துடன் என்னுடைய இந்த வீடியோவை ஒப்பிட்டு இணைத்து பலர் அவர்களது யூகத்தில் யூட்யூப்களில் வீடியோ பதிவு செய்துள்ளனர். காவல் துறையினரும் நான் பேசியது வதந்தி என்றும் வதந்தியைப் பரப்பியது சட்டப்படி குற்றம் என்றும் தெரிவித்திருந்தனர்.
அதேபோல் காவல்துறை 2022 மற்றும் 2023-ல் இதுபோன்ற எந்த ஒரு விஷயமும் காவல்துறை பதிவேட்டில் பதிவாகவில்லை என்று தெரிவித்து இருந்தார்கள். ஆனால் 15 வருடங்களுக்கு முன்பாக கூட இது போன்ற ஒரு விஷயம் நடந்ததாகச் செய்திகளில் வந்ததாக நண்பர்கள் தெரிவித்தனர்.
சமூக வலைதளங்கள் மற்றும் இசை வெளியீடு நிகழ்ச்சிகளில் நான் அதிகம் கலந்து கொள்வதுண்டு அதுபோன்ற ஒரு நிகழ்வாகத் தான் நீண்ட காலமாக இதைப் பற்றிப் பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன். அந்த ஒரு காரணத்தாலேயே இதைப் பற்றிப் பேசி வீடியோ பதிவிட்டேன். மற்றபடி இதனால் எனக்கு எந்தவொரு ஆதாயமும் இல்லை, காவல்துறை பற்றி நான் குறை கூறவும் இல்லை" என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நெல்லை மக்களவை தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியா? திடீர் டெல்லி பயணத்தின் பின்னணி என்ன?