திண்டுக்கல்: மதுரையில் மாவட்டத்திலிருந்து 1965 இல் தனியாக பிரிக்கப்பட்டு உதயமான திண்டுக்கல் மாவட்டம் இரும்பு பூட்டுகள், மற்றும் இரும்பு பாதுகாப்பு பெட்டகங்கள் உற்பத்தி செய்வதில் பெயர் பெற்ற மாவட்டமாகும். கூட்டுறவுத் துறையின் கீழ் இங்கு ஓர் பூட்டு உற்பத்தி பிரிவு செயல்படுகிறது. திண்டுக்கல்லில் குறிப்பிடத்தக்க மற்றொரு தொழில் தோல் பதனிடுதலாகும்.
சட்டமன்ற தொகுதிகள்: திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை (தனி), நத்தம் திண்டுக்கல் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.
அதிக முறை வெற்றி பெற்ற கட்சிகள்: இந்த தொகுதியில் அதிமுக 8 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 5 முறையும், திமுக 4 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன் 4 முறை வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளார். இவரை அடுத்து என்.எஸ்.வி.சித்தன், மாயத்தேவர் ஆகியோர் தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளனர்.
எம்ஜிஆருக்குத் திருப்புமுனை ஏற்படுத்திய மாவட்டம் : அதிமுகவிற்குத் திருப்புமுனையை ஏற்படுத்திய மாவட்டம் திண்டுக்கல். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் திமுகவிலிருந்து கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து, அதிமுக என்ற புதிய கட்சியைக் கடந்த 1972 ஆம் ஆண்டு ஆரம்பித்தார்.
கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே 1973ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற பாராளுமன்ற இடைத்தேர்தலில் கே.மாயத்தேவரை அதிமுகவின் வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்தார். இந்த வகையில், திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதிதான் எம்.ஜி.ஆருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய தொகுதியாகும்.
2019 இல் அபார வெற்றி பெற்ற திமுக: கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் மொத்தமிருந்த 15,40,495 வாக்காளர்களில் (ஆண்கள் 7,53,497, பெண்கள் 7,86,840, மூன்றாம் பாலினத்தவர்கள் 158 பேர்) 11,60,046 வாக்குகள் (77.03%) பதிவாகின.
இவற்றில், திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வேலுசாமி 7,46,523 வாக்குகளும், பாமக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜோதி முத்து 2,07,551 வாக்குகளும் பெற்றனர். சுயேச்சை வேட்பாளர் களம் கண்ட ஜோதி முருகன் 62,875 வாக்குகளும், நாதக வேட்பாளர் மன்சூர் அலிகான் 54,957 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் 38, 784 வாக்குகளும் பெற்றனர். இந்த தேர்தலில் பாமக வேட்பாளரைவிட திமுக வேட்பாளர் 5,38,972 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
2024 தேர்தல் வாக்குப்பதிவு விவரம்: திண்டுக்கல் தொகுதியில் மொத்தம் 16,07,051 வாக்காளர்கள் உள்ள நிலையில் ( 7,80,074 ஆண் வாக்காளர்கள், 8,26,759 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 218 பேர்) இத்தேர்தலில் மொத்தம் 11,43,196 வாக்குகள் (71.14%) பதிவாகி உள்ளன.
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சச்சிதானந்தம், அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளராக முகமது முபாரக், பாஜக கூட்டணியில் பாமக கட்சி வேட்பாளர் திலகபாமா, நாம் தமிழர் கட்சியின் டாக்டர் கயிலை ராஜன் உள்ளிட்ட 15 பேர் போட்டியிட்டுள்ளனர்.
வெற்றி வாய்ப்பு யாருக்கு?: நிலக்கோட்டை பகுதியில் விளையும் மலர்களைக் கொண்டு வாசனைத் திரவியம் தயாரிக்கும் அரசு தொழிற்சாலைகள் தொடங்காதது. படித்த பட்டதாரிகள் வேலை கிடைக்குமாறு தொழிற்சாலைகள் அமைத்து தராதது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது இந்த நிலையில் பலம் வாய்ந்த கூட்டணியாக கருதப்படும் திமுக கூட்டணியின் சிபிஎம் வேட்பாளர் வெற்றிப் பெறுவாரா? இத்தொகுதியில் உள்ள பாரம்பரிய வாக்கு வங்கி அதிமுக கைகொடுக்குமா?, பாஜக - பாமக கூட்டணி தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்விகளுக்கான பதில் ஜுன் 4 ஆம் தேதி தெரிந்துவிடும்.
இதையும் படிங்க: தேர்தல் 2024: மாற்றத்தை எதிர்நோக்குகிறதா கடலூர் தொகுதி? வெற்றி யார் பக்கம்? - LOK SABHA ELECTION 2024