திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், சோழங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (48). இவர் காரைக்கால் துறைமுகத்தில் போக்குவரத்து வாகன ஒப்பந்தக்காரராக இருந்தார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தஞ்சை ராஜாமணிநகர் பகுதியில் உறவினர் ஒருவரது புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாபு தனது காரில் மகனுடன் வந்த போது, தஞ்சாவூர் அருகே ஞானம் நகர் பகுதியிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் எதிரே மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள், காரை வழிமறித்து மகன் கண் முன்னே பாபுவை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்ட பாபுவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், பாபு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக வைப்பூர் காவல் நிலையத்தில் தொழில் போட்டி காரணமாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் வைப்பூர் காவல் நிலையம், முதல்வரின் தனிப்பிரிவு, திருச்சி ஐஜி, டிஜிபி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு புகார் மனு அளித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், வைப்பூர் காவல் நிலையத்தில் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பாபு புகார் அளித்து ஆறு மாதங்கள் ஆகியும், அந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காத வைப்பூர் காவல் நிலைய பொறுப்பு காவல் ஆய்வாளரும், திருவாரூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளருமான அகிலாண்டேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பள்ளிவாசல் இடிக்கப்படுவதைக் கண்டித்து போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் கைது.. சென்னையில் பரபரப்பு! - Koyambedu mosque demolition