தருமபுரி: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள், வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கிய நிலையில் அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் தொடர்ச்சியாக வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். வேட்பு மனு தாக்கல் செய்யக் கடைசி நாள் மார்ச் 27ஆம் தேதி ஆகும். மேலும், மனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் முக்கிய கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் இன்று (மார்ச்.25) வேட்பு மனுவைத் தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், தருமபுரி தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி, மாவட்ட தேர்தல் அலுவலர் சாந்தி அவர்களிடம் வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். இதில், அவருடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக தலைமை நிலைய செயலாளர் டி.கே ராஜேந்திரன், பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி, முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி கூறியதாவது, “தருமபுரி காவிரி உபரிநீர் திட்டத்தைச் செயல்படுத்துவது தான் எனது முதல் குறிக்கோள். இதற்காக நூறு விழுக்காடு தருமபுரி மக்கள் 10 ஆண்டு காலமாகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு 10 லட்சம் கையெழுத்து போன்ற போராட்டங்களை பாமக நடத்தியுள்ளது.
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் மக்கள் தண்ணீர் பிரச்சனை எதுவும் இன்றி, வேலைவாய்ப்பு முழுமையாகக் கிடைத்து அவர்களுடைய வாழ்வாதாரம் பெருகும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள மூன்று லட்சம் இளைஞர்கள் வெளி மாவட்டங்களில் வேலை செய்கின்றனர். மண்ணின் மைந்தர்களைத் திரும்பக் கொண்டு வர மிகப்பெரிய தொழிற்சாலைகள் இங்கு இருக்க வேண்டும்.
இதற்காக சிப்காட் தொழிற்சாலை வளாகம் இங்கு அமைக்கப்பட உள்ளது. இதற்கு, எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். ஓராண்டுக்குள் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும்.
மேலும், இப்பகுதியில் விளையக்கூடிய விளைப்பொருட்களான தக்காளி, புளி, மாம்பழம், பட்டுப்புழு உற்பத்தி, பருத்தி போன்றவற்றைக் குளிர்பதன கிடங்குகளில் பதப்படுத்தி அவற்றின் மதிப்பினை கூட்டி வணிகம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தருமபுரி மொரப்பூர் ரயில்வே திட்டம் 80 ஆண்டுக் கால கனவு. அந்த கனவைப் பாட்டாளி மக்கள் கட்சி, அதிகாரிகளைச் சந்தித்து இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார்கள். அதற்கான நிதி ஒதுக்கீடும் பெற்றுத் தந்திருக்கிறார்கள். மக்களின் கனவுத் திட்டம் கனவாக இல்லாமல் நினைவாக இருக்க வேண்டும். அதற்காக எனது பணி நிச்சயம் இருக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: 24 மணிநேரத்தில் மூவர் உயிரை வாங்கிய வெள்ளியங்கிரி மலை.. பக்தர்களுக்கு வனத்துறையின் அட்வைஸ் என்ன? - Velliangiri Hills Death