தருமபுரி: நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் மற்றும் ஒரே கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் பாமக சார்பில் சௌமியா அன்புமணியும், திமுக சார்பில் வழக்கறிஞர் ஆ.மணி, அதிமுக சார்பில் மருத்துவர் அசோகன், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா பொன்னிவளவனும் போட்டியிட்டனர். தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர் உள்ளிட்ட 5 சட்டமன்றத் தொகுதிகளும், சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்றத் தொகுதி என ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் 12 லட்சத்து 38 ஆயிரத்து 123 வாக்குகள் பதிவானது.
முன்னேற்பாடுகள் தீவிரம்: தருமபுரி தொகுதி வாக்குப்பதிவில் 81.20 சதவீத வாக்குகள் பதிவாகி, தமிழக அளவில் முதல் இடம் பெற்றுள்ளது. தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தருமபுரி செட்டி கரையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாளை காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.
இந்நிலையில், நாளை நாடு முழுவதும் வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளன. அந்த வகையில், தருமபுரி மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை ஒரு மேஜைக்கு 14 வாக்கு பெட்டிகள் என வாக்குகள் எண்ணப்பட உள்ளது. பாலக்கோடு சட்டப்பேரவை தொகுதியில் 20 சுற்றுகளும், பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதியில் 21 சுற்றுகளும், தர்மபுரி மற்றும் அரூர் சட்டப்பேரவை தொகுதியில் 22 சுற்றுக்களும் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் 23 சுற்றுகளும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
தீவிர கண்காணிப்பு: வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகளை தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சாந்தி தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் உள்ளிட்டோர் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதி வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க அருணா ரெஜோரியா, அரூர் மற்றும் மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க ஸ்ரீ ஹா்ஷா எஸ் செட்டியை மத்திய பார்வையாளர்களாக இந்திய தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன.
இதையும் படிங்க: நெல்லையில் அடுத்த எம்பி யார்? வாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகள் என்ன? - Nellai Lok Sabha Constituency