மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் தொடர்பான ஆபாச ஆடியோ, வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியதாக கடந்த பிப்ரவரி மாதம் மயிலாடுதுறை போலீசார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம், ஆடுதுறை வினோத், விக்னேஷ், செம்பனார்கோயில் கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, ஸ்ரீநிவாஸ் ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் 5 பேரும் 90 நாட்கள் சிறையில் இருந்த நிலையில், அண்மையில் ஜாமினில் வெளியே வந்தனர். மேலும் இவ்வழக்கில் 4 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது நபராக குற்றம் சாட்டப்பட்டு, தலைமறைவாக இருந்த தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் திருவையாறு செந்தில் (48) நான்கு மாதங்களாக தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் வாரணாசியில் பதுங்கி இருந்த செந்தில், கடந்த ஜூன் 10ஆம் தேதி இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனைதொடர்ந்து 11ஆம் தேதி மயிலாடுதுறை சிறப்பு தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையிலான போலீசார் விமானம் மூலம் வாரணாசிக்கு சென்று, அங்கு மொட்டை அடித்து, தாடி வைத்து, மாறு வேடத்தில் இருந்த செந்திலை கைது செய்து மயிலாடுதுறைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கில் செந்தில் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை நீதிபதி விஜயகுமாரி தள்ளுபடி செய்ததை தொடர்ந்து அவர் மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: மூவேந்தர் முன்னேற்ற கழக நிர்வாகி கில்லி பிரகாஷ் சிறையில் தற்கொலை முயற்சி! - prisoner suicide attempt