திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடியது திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அண்ணாமலையார் திருக்கோயில். இங்கு ஒவ்வொரு வருடமும், சித்ரா பெளர்ணமி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
அந்த வகையில், இந்த ஆண்டும் சித்ரா பௌர்ணமியான இன்று (ஏப்.23), தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்கின்றனர்.
மேலும், அண்ணாமலையார் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப்பாதையில் மாதம் மாதம் நடைபெறக்கூடிய பௌர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். இதில், சித்ரா பௌர்ணமி கிரிவலமானது மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். சித்ரா பௌர்ணமியன்று, சுமார் 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என எதிர்பார்க்கும் நிலையில், இன்று அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
சித்ரா பௌர்ணமிக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகளும், 11 தற்காலிகப் பேருந்து நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
சுகாதாரத் துறையின் மூலம், அண்ணாமலையார் கோயில் மற்றும் கிரிவலப்பாதை உள்ளிட்ட 15 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக, அன்னதானம் வழங்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இடங்கள் ஒதுக்கப்பட்டு, அனுமதி வழங்கி பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பள்ளத்தில் சரிந்த கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்! - Kumbakonam Sarangapani Temple