தூத்துக்குடி: பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரை பகுதிகளில் இன்று (மே 19) அதிக அளவிலான ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குவதால் பக்தர்களுக்கு கடலில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். அறுபடை வீடுகளிலேயே திருச்செந்தூர் மட்டும் தான் கடற்கரையோரம் அமைந்துள்ளது. இங்கு வரக்கூடிய பக்தர்கள் கோயிலுக்குச் செல்வதற்கு முன், கடலில் புனித நீராடிவிட்டு பின்னர் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் கோயில் கடற்கரை பகுதியில் அரிய வகை மீனான ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியிருப்பதாக கோயில் கடற்கரை பாதுகாப்புக் குழுவினர், கோயில் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஜெல்லி மீனானது பக்தர்கள் உடலில் பட்டால் அரிப்பு ஏற்படுவதோடு, தோல் வியாதிகளையும் உருவாக்கும்.
இந்த நிலையில், பக்தர்கள் கடலில் எச்சரிக்கையாக குளிக்க வேண்டும் என நேற்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று (மே 19) ஞாயிற்றுக்கிழமை என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கோயிலில் குவிந்த வண்ணம் இருந்தனர்.
இதனை அடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் பக்தர்கள் கடலில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை அறிவிப்பு செய்து வருகின்றனர். தொடர்ந்து, கடற்கரையில் உள்ள பக்தர்களை போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழுவினர் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காகவும், கடலில் இறங்கி ஆட்டம் போடுவதற்காகவும் வந்த பக்தர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.