மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே விநாயகர்பாளையத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (42). தரங்கம்பாடி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலரான அருண்குமார், பொறையார் ரோட்டரி சங்கத் தலைவராக பொறுப்பில் உள்ளார். மேலும், வாடகை பாத்திர கடை நடத்தி வரும் இவர் ஜோசியமும் பார்த்து வந்துள்ளார்.
அருண்குமார் தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள பழமைமிக்க மாசிலாமணி நாதர் கோயிலில் வெள்ளிக்கிழமை தோறும் சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி, கடந்த 26ஆம் தேதி இரவு கோயில் நடை சாத்தப்படும் நேரத்தில் அருண்குமார் கோயில் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த போது, அங்கு திடீரென வந்த மர்ம நபர்கள் அருண் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக, பொறையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், விபத்தில் 65 சதவீதம் தீக்காயமடைந்த அருண்குமார் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில், அருண்குமார் அளித்த தகவலின் பேரில், தரங்கம்பாடியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ராஜ்குமார் இடத்தில் அருண்குமார் கடை நடத்தி வந்த நிலையில், இடத்தை காலி செய்வது தொடர்பாக இருவருக்கும் இடையில் முன்விரோதம் இருந்ததாக அருண்குமார் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். அதன்படி, ராஜ்குமார் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கருதி, அவரை கைது செய்த போலீசார் விசாரணையில் முகாந்திரம் எதுவும் இல்லாததால் ராஜ்குமாரை பொறையார் போலீசார் விடுவித்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண்குமார் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்