ராணிப்பேட்டை: 108 திவ்ய தேசங்களில் 65-வது திவ்ய தேசமான சோளிங்கர் யோக நரசிம்மர் கோயில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளது. தொண்டை நாட்டில் உள்ள 22 திவ்ய தேசங்களில் இந்த சோளிங்கர் யோக நரசிம்மர் கோயில் மிகவும் சிறப்புக்குரியதாகும். இக்கோயில் காஞ்சிபுரத்திற்கும், திருப்பதிக்கும் இடையில் அமைந்துள்ளது.
இக்கோயிலுக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக கோயில் நிர்வாகத்தின் சார்பில், ரோப் கார் சேவை தொடங்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வந்துள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மூன்று நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கோயிலைச் சுற்றிப் பார்க்க வந்த பெங்களூரைச் சேர்ந்த முத்துக்குமாரன் (47) என்பவர், ரோப் கார் சேவை இல்லாததால் படிப்பாதை வழியாக மலை ஏறியுள்ளார். இதில் அவர் ஆயிரத்து 200வது படியில் ஏறிக் கொண்டிருந்த நிலையில், நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார்.
இதனால் அவருடன் வந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பால் முத்துக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து, போலீசார் அவரது உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில், பெங்களூரில் இருந்து வந்த முத்துக்குமாரின் உறவினர்கள், அவரது உடலை பெங்களூருக்கு எடுத்துச் சென்றுள்ளனர். சாமி தரிசனத்திற்கு வந்த பெங்களூரைச் சேர்ந்த பக்தர் கோயில் மலை ஏரும் பொழுது உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விரைவில் ரஜினிகாந்த் பயோபிக்.. ரஜினியாக நடிக்கப்போவது யார்? - Rajinikanth Biopic