சென்னை: சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தை தேவநாதன் யாதவ் நடத்தி வருகிறார். தற்போது இந்த நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்புத்தொகை உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிறுவனம் மயிலாப்பூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. மேலும், சென்னையில் மட்டும் 5 கிளைகள் உள்ளன. இந்த நிதி நிறுவனத்தில் குறைந்தபட்ச நிரந்தர வைப்பு நிதி ரூ.1 லட்சம் எனவும், அதிகபட்சமாக எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் நிரந்தர வைப்பு நிதியாகச் செலுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், செலுத்தும் பணத்திற்கு 8 முதல் 12 சதவீத வட்டி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால், அதை நம்பி தமிழ்நாடு முழுவதும் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும், ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையிலும் ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில், சிக்கல் வெடிக்க கிளம்பியதன் முதல் நிலை, முதலீடு செய்தவர்களுக்கு முதிர்வுத் தொகை மற்றும் வட்டிப் பணம் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தினமும் மயிலாப்பூர் பகுதியில் உள்ள நிதி நிறுவனத்திற்குச் சென்று பணத்தைக் கேட்டு முறையிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பலர் இது குறித்து காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் நிதி நிறுவனம் சார்பில் முறையாக பதில் அளிக்காததால், கடந்த ஜுன் 6ஆம் தேதி முதலீட்டாளர்கள் பலர் நிதி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், பிரசாத் என்பவர் அளித்த புகார் தொடர்பாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் 144 முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.24.5 கோடி பெற்று ஏமாற்றியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, திருச்சியில் வைத்து இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் யாதவை கைது செய்தனர். மேலும், இதே மோசடி வழக்கு தொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குனர்களான குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்டவர்களிடம் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த பல கோடி ரூபாய் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனம், தி.நகரில் உள்ள தேவநாதனின் வீடு, குற்றத்திற்கு உடந்தையாக இருந்த நபர்களின் வீடுகள் என 12 இடங்களில் சோதனை மேற்கொண்டு வந்தனர்.
இந்தச் சோதனையில் 4 லட்சம் பணம், இரண்டு கார்கள், ஹார்ட் டிஸ்க்குகள் உள்பட சில முக்கிய ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், சோதனையின் முடிவில் நிதி நிறுவனத்தை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்துச் சென்றனர்.
மயிலாப்பூர் நிதி நிறுவனத்தின் மீது 300க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ள நிலையில், தேவநாதன் பெயரில் உள்ள 5 வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இதுவரை 27 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
இதில் நிதி நிறுவனத்தின் பெயரில் இருந்த 18 வங்கிக் கணக்குகள், தேவநாதனின் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றும் செய்தியாளர் குணசீலனின் 2 வங்கிக் கணக்குகள், ஒளிப்பதிவாளர் மகிமைநாதனின் 2 வங்கிக் கணக்குகளையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி உள்ளனர்.
தேவநாதன் தொடர்புடைய அடையாறு, வண்ணாரப்பேட்டை, சைதாப்பேட்டை, பெரம்பூரில் இயங்கி வந்த நிதி நிறுவனக் கிளை அலுவலகங்கள், மயிலாப்பூரில் உள்ள 2 கட்டடங்கள் உட்பட 8 கட்டடங்களுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று தேவநாதன் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேவநாதன் அளித்த தகவலின் அடிப்படையில், போலீசார் இந்த 3 கிலோ தங்கத்தைக் கைப்பற்றியுள்ளனர். மேலும், மோசடி தொடர்பாக மயிலாப்பூரில் உள்ள அலுவலகத்துக்கு தேவநாதனை அழைத்து வந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். எனவே, இதன் மூலம் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: துபாயில் இருந்து தங்கம் கடத்தல்.. 4 மாதமாக அறையில் சித்ரவதை ஏன்? - சினிமாவை விஞ்சிய பகீர் சம்பவம்!