சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கர் அண்மையில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இதுவரைக்கும் சவுக்கு சங்கர் மீது என்னென்ன வழக்குகள் பதியப்பட்டுள்ளது என்ற தகவலைப் பார்க்கலாம்.
கோவை காவல்துறை வழக்கு: மே 4ஆம் தேதி (1 வழக்கு): சவுக்கு சங்கர் மே 4ஆம் தேதி தேனியில் வைத்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரால் கீழ்க்கண்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு விவரமாவன, 294(b), 353, 509 IPC, 4 - TNPHW ACT. 67 - IT ACT 353 IPC r/w பிரிவு 4 தமிழ்நாடு (பெண் துன்புறுத்தல் தடைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம்) 2000 பிரிவு 67-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே நாளில், பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீசார், சவுக்கு சங்கரின் காரில் இருந்து 500 கிராம் கஞ்சா எடுத்தது மற்றும் பெண் காவலரைத் திட்டி தள்ளிவிட்டு, அவரது பணியைச் செய்ய விடாமல் செய்ததாக ஐபிசி பிரிவுகள் 195/2024 U/S 294(b), 353 IPC & 4 of TNPHW ACT & 8(c) r/w 20(b)(ii)(A), 29(1), 25 of NDPS ACT-ன் கீழ் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருச்சி காவல்துறை வழக்கு: மே 8ஆம் தேதி (1 வழக்கு): இதேபோல, பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் திருச்சியிலும் சவுக்கு சங்கர் மீது ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த வழக்கின் விவரமானது, 1/24 U/s 294(b), 353, 509 IPC, 67 IT act and 4 of TN prohibition of harassment of women act பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மே 8ஆம் தேதி கோவை சிறையிலிருந்தபடி சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வழக்குகள் மே 7ஆம் தேதி (3 வழக்கு): தனியார் தொலைக்காட்சியின் பெண் செய்தி ஆசிரியர் கொடுத்த புகாரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 294(b), 354D, 506(I), 509 மற்றும் பிரிவு 4 தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தமிழர் முன்னேற்றப் படை நிறுவனர் மற்றும் தலைவர் வீரலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், சவுக்கு சங்கர் மீது மத்திய குற்றப்பிரிவு, சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் 294(b), 506(i) ஆகிய சட்டப்பிரிவுகளில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்கண்ட இரண்டு வழக்குகளிலும் விசாரணை நடந்து வருகிறது.
மே 11 ஆம் தேதி (இன்று) பதிவான வழக்கு: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சிஎம்டிஏவின் போலியான ஆவணங்களைத் தயாரித்து அவதூறு பரப்பியதாக மோசடி, போலி ஆவணங்களை புனைதல், போலி ஆவணங்கள் மூலம் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துதல் உட்பட 6 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மே 11ஆம் தேதி நிலவரப்படி, சவுக்கு சங்கர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.