சென்னை: கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை 16.07 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது.
சென்னையில் இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் பணிகள் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 119 கி.மீ நீளத்திற்கு நடக்கும் இந்தப் பணிகள் 2028ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய முடிவதால், பொதுமக்கள் நாளுக்கு நாள் அதிகளவில் பயணிக்கின்றனர்.
இந்நிலையில், புறநகர் பகுதிகளை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க, மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் சிறுசேரி - கிளாம்பாக்கம், பூந்தமல்லி - பரந்தூர், கோயம்பேடு - ஆவடி ஆகிய பகுதிகளுக்கு மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பது குறித்து சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கோயம்பேடு - ஆவடி வரை மெட்ரோ ரயில் வழித்தடம் மற்றும் சிறுசேரி - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கான சாத்தியக்கூறு அறிக்கையினை, கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் மாதம் மெட்ரோ ரயில் நிறுவனம் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.
இந்நிலையில், கோயம்பேடு - ஆவடி மெட்ரோ சேவைக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது. இதன்படி, வழித்தடம் ஐந்தில் கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம் முகப்பேர் வழியாக ஆவடி வரை 16.07 கி.மீ தூரத்திற்கு வழித்தடத்தை நீட்டிப்பது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது.
இதையும் படிங்க: டான்செட், சீட்டா தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஒரு அறிவிப்பு.! அண்ணா பல்கலைக்கழகம் கூறுவது என்ன?