தஞ்சாவூர்: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தைத் தொடர்ந்து தஞ்சை மாவட்ட மதுவிலக்கு டிஎஸ்பி முருகதாசன் உத்தரவின் பெயரில், பட்டுக்கோட்டை மதுவிலக்கு ஆய்வாளர் ஜெயா தலைமையில் போலீசார் பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டி, தம்பிக்கோட்டை, மேலக்காடு, வடகாடு மற்றும் சின்னாத்தங்காடு உள்ளிட்ட பகுதிகளில் அதிரடியாக ஆய்வில் ஈடுபட்டனர்.
இந்த ஆய்வின் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை மற்றும் சின்னத்தங்காடு பகுதியில் 5 பேரல்களில் 150 லிட்டர் ஊரல் சாராயம் அதாவது கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கு முந்தைய படிநிலையில் மூலப் பொருள்கள் கலந்த கலவையான ஊரல் சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
மேலும், இந்த சாராய உற்பத்தியில் ஈடுபட்ட சின்னாத்தங்காடு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (78) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட மற்ற நபர்களை மதுவிலக்கு போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதேபோல் பட்டுக்கோட்டை அருகே உள்ள பல்வேறு கிராமங்களிலும், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சாராயம் காய்ச்சும் பழக்கம் உள்ள நபர்களையும் தேடிப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பல உயிர்கள் பலியான நிலையில் பட்டுக்கோட்டை பகுதியில் 150 லிட்டர் ஊரல் சாராயம் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.