சென்னை : சென்னை, சேத்துப்பட்டில் உள்ள எம்சிசி பள்ளியில் 1974ம் ஆண்டு படித்த மாணவர்களின் பொன் விழா ஆண்டு Alumni Meet நடைபெற்றது. இதில், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், பள்ளியின் ‘Golden Jubilee 1974 Batch’ தலைவருமான ஸ்ரீதர் வாண்டையார் கலந்து கொண்டார். மேலும், சிறப்பு அழைப்பாளராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுகளில், சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளி சார்பில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
அப்போது மேடையில் பேசிய அவர், "மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் என்னை அழைத்தற்கு நன்றி. இந்த நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று நேரம் கேட்டபோது டிசம்பர் மாதம் வைத்துள்ளீர்கள். பருவமழை காலம் என்பதால் சென்னையிலிருந்தால் வருகிறேன் என்று தெரிவித்து இருந்தேன்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் படித்த சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி தமிழ்நாட்டின் பெருமைமிகு கல்வி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
— Udhay (@Udhaystalin) December 8, 2024
இச்சிறப்புக்குரியப் பள்ளியில் 1974-ஆம் ஆண்டு படித்த மாணவர்களின் பொன் விழா ஆண்டு Alumni Meet-ல், மூவேந்தர் முன்னேற்றக்… pic.twitter.com/dxsqfTYXgB
மழையால் இரண்டு நாட்கள் வெளியூர்களில் இருந்தேன். இயற்கை இன்று உங்களுக்கு உதவி உள்ளது. பொதுவாக குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு தான் பெற்றவர்கள் செல்வார்கள். பள்ளியில் குழந்தைகள் செய்யும் தவறுகளை பெற்றோர்களிடம் கூறுவதற்காக அழைப்பார்கள். என் தந்தை படித்த பள்ளிக்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளீர்கள் நான் தவறாக சொல்லவில்லை. என் தந்தை படித்த பள்ளிக்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது.
தமிழக முதலமைச்சரை உருவாக்கிய சிறப்பான பள்ளி இது. என் தந்தை மட்டுமல்ல என் பெரியப்பாக்கள், திமுக உறவுகள், காங்கிரஸ் உறவுகளும் இங்கு உள்ளார்கள். தலைமை செயலகத்தில் உள்ளது போல் உள்ளது. 'நம்ம பள்ளி நம்ம பவுண்டேஷன்' என்ற திட்டத்தை இந்த பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு தான் தமிழக முதலமைச்சர் தொடங்கினார்.
இதையும் படிங்க : டூட்டி நேரத்தில் 'புஷ்பா' படம் பார்த்த போலீஸ் அதிகாரி; நெல்லை கமிஷனரிடம் வசமாக சிக்கினார்!
தமிழ்நாட்டில் இந்த திட்டத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. நம்ம பள்ளி நம்ம பவுண்டேஷன் திட்டத்தைப் பார்த்து தான் விளையாட்டுத் துறையில் சாம்பியன் திட்டத்தை தொடங்கி உள்ளோம்.
பள்ளியில் படித்தாலே தீட்டு என்று இருந்த நிலையில், படிக்காமல் விட்டால் தான் தீட்டு என்று கல்வியைக் கொடுக்க கிறிஸ்துவ அமைப்புகள் பள்ளிகளை திறந்து உதவின. கல்வி ஒன்றே அழியாத செல்வம்; யாராலும் திருட முடியாத சொத்து என்று தமிழ்நாடு முதலமைச்சர் பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார்.
நம் மாணவர்களை கல்வியில் இருந்து வெளியேற்றும் திட்டமாக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள விஸ்வகர்மா திட்டம் உள்ளது. குலத் தொழிலை செய்ய வேண்டும் என கூறிக் கொண்டு ஒரு குரூப் டெல்லியை சுற்றி கொண்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு மாணவருக்கு கூட கல்வி சேரவில்லை என்ற நிலை இருக்கக்கூடாது என முதலமைச்சர் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இந்த திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். விஸ்வகர்மா என்ற திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்கள். தாத்தா, அப்பா என்ன வேலை செய்தார்களோ அதே வேலையை செய்வதுதான் விஸ்வகர்மா திட்டம்.
தமிழ்நாடு முதலமைச்சர் 'விஸ்வகர்மா திட்டம்' தமிழகத்தில் நிச்சயம் செயல்படுத்தப்படாது என்று தெளிவாக தெரிவித்துள்ளார். நீங்கள் கற்ற கல்வி அடுத்த தலைமுறையினருக்கு பயன்படும் வகையில் செயல்படுங்கள். ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுங்கள் என்று உரிமையோடும், அன்போடும் கேட்டுக் கொள்கிறேன்" என்று பேசினார்.