சேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் தற்போது வரை 50 நபர்கள் உயிரிழந்த நிலையில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கள்ளச்சாராய விவகாரத்தில் அரசின் செயல்பாடு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் சேலம் கோட்டை மைதானத்தில் கள்ளச்சாராய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்து கைது செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் பெரியசாமி கூறுகையில், "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் தொடர்புடைய தாசில்தார் , கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அனைவரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் முற்றிலுமாக கள்ளச்சாராயத்தை ஒழித்து பூரண மதுவிலக்கு அமல்படுத்திட வேண்டும் என்றும் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்" என்று பெரியசாமி தெரிவித்தார்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குறித்து கடந்த ஆண்டே ஈபிஎஸ் கடிதம்.. அரசின் அலட்சியத்தால் வந்த ஆபத்து என சாடல்!