கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே உள்ள தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள வைக்கல்லூர் பகுதியில், தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் தனியார் படகு தளம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த படகு தளங்களில் மீன்பிடித் தொழில் முடிந்த பின்னர், ஏராளமான விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு, பராமரிப்புப் பணிகள் முடிந்த பின்னர், மீண்டும் மீன்பிடித் தொழிலுக்கு எடுத்துச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில், வைக்கல்லூர் பகுதியில் உள்ள தனியார் படகு தளத்தில், வல்லவிளைப் பகுதியைச் சேர்ந்த யோபு என்பவரின் விசைப்படகு, தூத்தூர் பகுதியைச் சேர்ந்த பெனி என்பவரின் விசைப்படகு மற்றும் கடியப்பட்டிணம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் விசைப்படகு என 3 படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.
இந்த, 3 விசைப்படகுகளும் நேற்று நள்ளிரவில் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. அதைக் கண்டோர் உடனடியாக, கொல்லங்கோடு தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், படகுகளில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால், தீ பற்றி எரியும் சம்பவ இடத்திற்குச் செல்லப் போதிய சாலை வசதி இல்லாத காரணத்தால், தீயணைப்பு வாகனம் செல்ல இயலாமல், சுமார் 200 மீட்டர் தொலைவிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் ஆட்டோ ஒன்றை அவசரம் அவசரமாகச் சம்பவ இடத்திற்கு வரவழைத்து, பின்னர் அந்த ஆட்டோவில் தீயணைப்பு உபகரணங்களை ஏற்றிக் கொண்டு தீயை அணைக்கு முயற்சியில், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
இதனிடையே, படகில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. அந்த விசைப்படகுகள் அனைத்து மரம் மற்றும் பைபர் கொண்டு உருவாக்கப்பட்டிருந்ததால், 3 விசைப்படகுகளும் மேலும் கொழுந்துவிட்டு எரிந்தது. அதன் பின்னர் நீண்ட நேரத்திற்குப் பின்னர் 3 படகுகளும் முழுவதுமாக எரிந்து நாசமாகியுள்ளது. இதனால் பல கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் படகு உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தற்போது, ஒரே நேரத்தில் 3 விசைப்படகுகளும் தீப்பிடித்து எரிந்ததால், முன்விரோதம் காரணமாக யாரேனும் விசைப்படகுகளுக்கு தீ வைத்துச் சென்றார்களா? அல்லது மின்கசிவு காரணமாக தீ பிடித்ததில் மற்ற விசைப்படகுகளுக்கும் பரவியதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
தற்போது, நள்ளிரவில் 3 விசைப்படகுகள் ஒரே நேரத்தில் எரிந்து, பல கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">