திருப்பத்தூர்: டெக்கரேஷன் பொருட்கள் வைத்திருந்த குடோனில் இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், பல லட்சம் மதிப்பிலான டெக்கரேஷன் பொருட்கள் எரிந்து நாசமாயின. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சில மணி நேரம் போராட்டத்திற்குப் பின்னர் தீயை அணைத்தனர்.
திருப்பத்தூர் அடுத்த சிவராஜ் பேட்டை பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மகன் ஜெயக்குமார் (35). இவர் பத்தாண்டுக் காலமாக ஸ்டார் டெகரேட்டர் என்ற பெயரில் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு டெக்கரேஷன் செய்யும் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் இவருக்குச் சொந்தமான குடோன் கருப்பனூர் பகுதியில் அமைந்துள்ளது. பைபர் பாக்ஸ், சீரியல் லைட், மற்றும் சோபா செட் உள்ளிட்ட டெக்கரேஷனுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இந்த குடோனில் இருந்துள்ளது. இந்நிலையில் இந்த குடோனில் இன்று திடீரென மர்மமான முறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ பற்றி எரிந்து கொண்டிருந்ததை அறிந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து பின்னர் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சில மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் டெக்கரேஷன் பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. அந்த பொருட்களின் மொத்த மதிப்பு மூன்று கோடி இருக்கும் என கூறப்படுகிறது. குடோனில் இருந்த யுபிஎஸ் வெடித்து, தீ பற்றி எறிந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருப்பத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள டெக்கரேட்டர்கள், இங்கிருந்தான் டெக்கரேஷன் பொருட்கள் வாடகைக்கு எடுத்துச் செல்வார்கள். இந்நிலையில் இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மேல்மலையனூர் அங்காளம்மன் பரமேஸ்வரி கோயில் திருத்தேர் பவனி; திரளான பக்தர்கள் தரிசனம்!