சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னையில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பான வழக்கு பதிவுக்காக எழும்பூர் நீதிமன்றம் வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய தயாநிதி மாறன், “முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உண்மைக்குப் புறம்பாக, நான் தொகுதி மேம்பாட்டு நிதியை 75 சதவீதம் பயன்படுத்தவில்லை என அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். எனவே, இதுகுறித்து 24 மணி நேரத்தில் அவர் மன்னிப்பு கேட்காவிட்டால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பேன் என்று தெரிவித்திருந்தேன்.
இது தொடர்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தேன். ஆனால், 24 மணி நேரமாகியும் அவர் மன்னிப்பு கேட்காததால், அவர் மீது அவதூறு வழக்கினை பதிவு செய்திருக்கிறேன். இந்த வழக்கு அடுத்த மாதம் 14ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இதுவரை 95 சதவீதத்துக்கும் மேல் தொகுதி நிதியைப் பயன்படுத்தியுள்ளேன். இதுவரை தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.17 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் வெறும் 17 லட்சம் தான் மீதம் உள்ளது. தொகுதி நிதி முழுவதையும் மத்திய சென்னை மக்களுக்காக செலவழித்துள்ளேன்.
எடப்பாடி பழனிசாமி தோல்வி விரக்தியில் பேசி வருகிறார். அவர் பேசுவது அவருக்குத் தெரிகிறதா என்று தெரியவில்லை. திமுகவினரைத் தாக்கி பேச வேண்டும் என்பதற்காக பேசி வருகிறார். உண்மை என்னவென்று மக்களுக்குத் தெரிய வேண்டும். என் தொகுதிக்கு சிறப்பான முறையில் பணியாற்றி இருக்கிறேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “செய்தி வெளியிட்ட ஆங்கில நாளேடு ஆர்.டி.ஐ மூலமாக அந்த செய்தியைப் பெற்றதாகவும், இதற்கு மறுப்பும் தெரிவித்து இருக்கிறது. இதேபோலவே ஆர்.டி.ஐ-இல் வந்த தவறான செய்தியை அண்ணாமலையும் செய்தார். ஆர்டிஐ முறை பாஜக ஆட்சியில் எப்படி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிகிறது" என்றார்.
இதையும் படிங்க: "ஓட்டு போடுவதற்காவது வண்டி அனுப்புங்க".. தேர்தல் பிரச்சாரத்தையே அறியாத திருநெல்வேலி காணி பழங்குடியினர்!