கரூர்: கரூர் மாவட்டம், புகலூர் வட்டம் தென்னிலை மொஞ்சனூர் கிராமத்தில் உள்ள வெட்டுக்காட்டுவலசையைச் சேர்ந்தவர் மனைவி பாப்பாத்தி (72). இவரது கணவர் இறந்துவிட்டார். இவர்களின் மகன் லோகநாதன் (50) மற்றும் வெள்ளகோயிலைச் சேர்ந்த விஜயலட்சுமிக்கு (45), கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
முன்னதாக மரம் ஏறும் தொழில் செய்து வந்த லோகநாதன், தற்போது லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இதனால் அடிக்கடி கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில்,கடந்த 8 ஆண்டுகளாக விஜயலட்சுமி கணவரைப் பிரிந்து, வெள்ளகோவிலில் உள்ள தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
இருப்பினும், மாதத்துக்கு ஒருமுறை வெட்டிக்காட்டுவலசுக்கு வந்து ஓரிரு நாட்கள் தங்கி மகன், மகளை விஜயலட்சுமி பராமரித்து வந்துள்ளார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமி கணவரின் வீட்டுக்கு வந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் (செப்டம்பர் 19) மாமியார் பாப்பாத்தியுடன் தொட்டியபட்டி சுப்பிரமணி விவசாயத் தோட்டத்தில் ஆடு மேய்ப்பதற்காக உடன் அழைத்துச் சென்றுள்ளார்.
இதன்பின்னர், மாலை விஜயலட்சுமி வீடு திரும்பிய நிலையில், பாப்பாத்தி வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினர் கேட்ட பொழுது, பின்னர் வருவதாக பாப்பாத்தி கூறியதால் ஆடுகளை மட்டும் அழைத்துக் கொண்டு வீடு திரும்பியதாக விஜயலட்சுமி கூறியுள்ளார். ஆனால், இரவு முழுவதும் பாப்பாத்தி வீடு திரும்பாத நிலையில், லோகநாதன் தனது தாயைக் காணவில்லை என தென்னிலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதன்படி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், நேற்று காலை 9 மணியளவில் முகம், தலை சிதைக்கப்பட்ட நிலையில் பாப்பாத்தியின் உடல் விவசாயத் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெராஸ்கான் அப்துல்லா, அரவக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் அப்துல் கபூர் மற்றும் தென்னிலை காவல் உதவி ஆய்வாளர் ஓம் பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், மாமியார் பாப்பாத்தி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பொழுது, மருமகள் விஜயலட்சுமியை தனது மகன் லோகநாதனுடன் இணைந்து குடும்பம் நடத்த வேண்டும், குழந்தைகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட விஜயலட்சுமி, ஆத்திரத்தில் பாப்பாத்தி மீது கல்லைத் தூக்கி கொலை செய்ததை விசாரணையில் ஒப்புக்கொண்டார்.
இதனை அடுத்து, இதனை கொலை வழக்காக பதிவு செய்த தென்னிலை போலீசார், விஜயலட்சுமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே, கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாப்பாத்தியின் உடல் உடற்கூறு ஆய்வு செய்து, அவரது குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைக்கப்பட்டது.