ஈரோடு: தமிழ்நாட்டில் தஞ்சை டெல்டா பாசனத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பாசனப் பரப்பும், தென் இந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையையும் பெற்றுள்ளது, பவானிசாகர் அணை. அணையின் முழு நீர்தேக்கப் பரப்பு 30 சதுர மைல்களும், அணையின் மொத்த உயரம் 105 அடியாகவும் உள்ளது.
அணையில் 32.8 டி.எம்சி வரை நீரை தேக்கி வைக்கலாம். கடந்த 1948ஆம் ஆண்டு பவானியாறும், மாயாறும் கூடுமிடத்தில் கீழ்பவானி அணை கட்டும் பணி துவங்கியது. இதனால் அணை நீர்த்தேக்கப் பகுதியில் இருந்த வடவள்ளி, பீர்கடவு, பட்டரமங்கலம், குய்யனூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பண்ணாரி வனப்பகுதியில் நிலம் வழங்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர்.
அணைக்குள் இருந்த பழமை வாய்ந்த கோயில்களில் உள்ள விக்கிரகங்கள் பத்திரமாக எடுத்து வரப்பட்டு, பவானிசாகரில் கீழ்பவானி வாயக்காலின் வலதுபுறத்தில் கோயில் கட்டப்பட்டு, விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு 1953ஆம் ஆண்டில் குடமுழுக்கு செய்யப்பட்டது. 1955ஆம் ஆண்டு அணை கட்டுமானப் பணி முடிந்தபின், அணைக்குள் முழுவதும் கற்களால் கட்டப்பட்ட கோயில் மற்றும் மண்டபங்கள் நீரில் மூழ்கி சிதிலமடைந்தன.
அதேபோல, அணைக்குள் நீரில் மூழ்கிய கிராமங்கள் இருந்த சுவடு காணாமல் போய்விட்டன. ஆனால், டணாய்க்கன் கோட்டையில் உள்ள மாதவராய பெருமாள் கோயில், சோமேஸ்வரர் மங்களாம்பிகை கோயில், பீரங்கித்திட்டு போன்றவை நீர்மட்டம் குறைந்த காலத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும். கடந்த 2018ஆம் ஆண்டு நீர்மட்டம் குறைந்து கோயில்கள் வெளியே தெரிந்த நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளில் நீர்மட்டம் குறையாத நிலையில் கோயில்கள் வெளியே தெரியவில்லை.
தற்போது அணையின் நீர்மட்டம் 45 அடியாக குறைந்துவிட்டதால், மாதவராய பெருமாள் கோயில் முழுவதுமாக காட்சியளிக்கிறது. கோயில் உட்பிரகாரத்தில் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. 48 தூண்கள் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இன்னும் 6 முதல் 10 அடி வரை நீர்மட்டம் குறைந்தால் சோமேஸ்வரர் மங்களாம்பிகை கோயில், பீரங்கித்திட்டு முழுவதுமாக காட்சியளிக்கும்.
சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில்கள் இவை என கல்வெட்டுக்கள் மற்றும் வரலாறுகளில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இக்கோயில்களை பொதுமக்கள் சென்று பார்க்க அனுமதி இல்லை. பவானிசாகர் அணை நீர்த்தேக்கம் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், அணை மேல் பகுதிக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை, மேலும் அணை நீர் தேக்கத்தில் முதலைகள் நடமாட்டம் உள்ளதால் டனாய்க்கண் கோட்டைக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தன.