சென்னை: சென்னை திருவிக நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர்ப் பந்தலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். அப்போது பொதுமக்களுக்கு மோர், பழங்கள், குளிர் பானங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது, "உலகம் முழுவதும் போற்றப்படும் நாள் மே தினம். தியாகத்தால் உருவான தினம் தான் தொழிலாளர் தினம். இந்தியாவில் சிந்தனை சிற்பி சிங்கார வேலர் தான் முதன் முதலில் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடினார், அவருக்கு எங்களது வீரவணக்கம்.
திமுக, தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடிக்கின்றனர். தேர்தல் காலத்தில் தொழிலாளர் வர்க்கத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு பெற்றும், அதன் பலன்களை அனுபவிக்க முடியவில்லை. அவர்களுக்கான நிலுவைத் தொகையைக் கொடுக்கவில்லை. இந்த ஆட்சியில் தொழிலாளர்கள் தட்டேந்தி பிச்சை கேட்டு போராடும் நிலைமையில் உள்ளனர்.
தொழிலாளர் தினத்தில் பிறந்த சகோதரர் அஜித்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அஜித்துக்கு எப்போதும் ஒரு சிறப்பான நன்றியை நான் சொல்வேன். அவர் ஒரு தைரியசாலி. கோழைகளை எனக்குப் பிடிக்காது. தைரியசாலியைத்தான் பிடிக்கும்.
கோடை காலத்தில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க முற்போக்கான திட்டங்கள் எதுவும் இந்த ஆட்சியில் செய்யவில்லை. குடிக்கவும், விவசாயத்திற்கும் தண்ணீர் கிடையாது. ஆனால், ஒரு முதலமைச்சர் கோட்டையில் இருந்துகொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவரின் கடமை.
ரோம் நகரம் தீ பிடித்து எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல், முதலமைச்சர் கொடைக்கானலில் கோல்ஃப் விளையாடுகிறார். சட்டம் ஒழுங்கு சரியில்லை. 48 மணி நேரத்தில் 10 கொலைகள். கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்கள் கிடைக்கிறது. அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. கூட்டணிக்காக கர்நாடகா செல்லும் முதலமைச்சர், காவிரி தண்ணீரைப் பெற செல்ல வழி தெரியவில்லை. இப்போது காலம் தாழ்த்தி நீதிமன்றம் செல்வது மக்களை ஏமாற்றும் செயல்.
பாடத்திட்டத்தில் வரலாற்றில் இடம் பிடித்தவர்கள் தான் இருப்பார்கள். ஆனால், கருணாநிதி வரலாற்றில் இடம் பிடித்தவரா? ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி, கருணாநிதி ஆட்சி. இப்படிப்பட்டவரின் வரலாறு, பாடத்திட்டத்தில் வரவேண்டுமா? அதிமுக ஆட்சி வந்ததும் கருணாநிதி குறித்தான பாடம் நீக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'பன்முகக் கலைஞர்' தலைப்பில் 10-ஆம் வகுப்பு பாடத்தில் கருணாநிதி வரலாறு.. சிறப்புத் தொகுப்பு!