சென்னை: தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதால், அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் முதல் முறையாக 91 சதவீதம் வந்துள்ளதாகக் கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியுள்ளார்.
12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.06) வெளியானது. இதில் இயற்பியல் பாடத்தில் 98.48 சதவீதம், வேதியியல் பாடத்தில் 99.14 சதவீதம், உயிரியல் பாடத்தில் 99.35 சதவீதம், கணக்கு பாடத்தில் 98.57 சதவீதம், தாவரவியல் பாடத்தில் 98.56 சதவீதம், விலங்கியல் பாடத்தில் 99.04 சதவீதம், கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் 99.80 சதவீதம், வணிகவியல் பாடத்தில் 97.77 சதவீதம், கணக்குப்பதிவியல் பாடத்தில் 96.61 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதே போல் முக்கிய பாடங்களான இயற்பியலில் 633 மாணவர்களும், வேதியியலில் 471 மாணவர்களும், உயிரியலில் 652 மாணவர்களும், கணக்கு பாடத்தில் 2587 மாணவர்களும், கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் 6,996 மாணவர்களும் என 26 ஆயிரத்து 352 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பொறியியல், வேளாண்மை, கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் இளங்கலையில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் துவங்கி உள்ளது.
இந்நிலையில் 2024 - 25ம் கல்வியாண்டில் உயர்கல்வியில் சேர்வதற்கான கட்ஆப் மதிப்பெண்கள் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி கூறுகையில், “12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் 0.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் முதல் முறையாக 91 சதவீதம் வந்துள்ளது. தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதால், நன்றாகப் படித்து மதிப்பெண் பெற்றால் பொறியியல், விவசாயம் உள்ளிட்ட படிப்புகளில் அரசுக்கல்லூரிகளில் குறைவான கட்டணத்தில் நல்ல படிப்பினை படிக்க முடியும் என்ற வாய்ப்பு இருக்கிறது.
பொறியியல் படிப்பினை பொறுத்த வரையில் கட் ஆப் மதிப்பெண்கள் குறைவதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம். கணக்கு பாடத்தில் 100 சதவீதம் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், இயற்பியல் பாடத்தில் 100 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
வேதியியல் பாடத்தில் 100 சதவீதம் பெற்றவர்களின் எண்ணிக்கை கடந்தாண்டு 3 ஆயிரத்து 909 பேர் என இருந்த நிலையில், நடப்பாண்டில் 471 பேராக உள்ளது. கணக்கு பாடத்தில் 100 சதவீதம் பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அகில இந்தியத் தொழில்நுட்ப கழகம் புதிய விதிமுறைகளின் படி, இடங்களை அதிகரித்து புதியப் பாடப்பிரிவுகளையும் அனுமதித்துள்ளது. இதனால் கட்ஆப் மதிப்பெண்கள் குறைவதற்குத் தான் வாய்ப்புகள் இருக்கும்.
26 ஆயிரத்து 352 பேர் ஒரு பாடத்தில் மட்டும் 100 மதிப்பெண்ணைப் பெற்றுள்ளனர். வணிகவியல் பாடத்திற்கு அதிகளவில் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கிறோம். கடந்த ஆண்டை விட 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை வணிகவியல், பொருளாதாரம், கணக்கு பதிவியியல் பாடங்களில் அதிகரித்துள்ளது.
இதனால் பிகாம் படிப்பிற்குக் கடுமையான போட்டி இருக்கும். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பிகாம் படிப்பிற்குப் போட்டி இருக்கும். மாணவர்கள் நல்ல கல்லூரியைத் தேர்வு செய்து, பாடத்திட்டத்தைத் தாண்டி படித்து அறிவை வளர்த்துக் கொண்டால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்”, என தெரிவித்தார்.