தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் தமிழக அரசு சிப்காட் தொழிற்சாலை அமைத்தால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று காவிரி உரிமை மீட்பு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
காவிரி உரிமை மீட்பு குழுவின் ஆலோசனை கூட்டம் குழுவின் ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் விவசாயி சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து காவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கூறியதாவது, “டெல்டா மாவட்டங்களில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. கடந்த அதிமுக ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த நிலையில், தற்போது தொழில் மண்டலங்களாக தமிழக அரசு மாற்றியுள்ளது. சிப்காட் தொழிற்சாலை வந்தால் விவசாயம் பாதிக்கப்படும்.
எனவே, டெல்டா மாவட்டங்களை தொழிற்சாலை மண்டலமாக மாற்றும் முடிவை கைவிட வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளை திரட்டி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டிற்கு சென்று முதலாளிகளை இங்கு கொண்டு வருகிறார். ஆனால், இங்குள்ள உழவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை என்னாவது? ” என்று அவர் கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “மேகதாது அணை கட்டினால் காவிரி தண்ணீரை ஒரு சொட்டு விடாமல் கர்நாடக அரசு தடுத்துவிடும். இதனால் தான் 67 டிஎம்சி கொண்ட அணையை அவர்கள் கட்டுகின்றனர். அதற்கு மாற்றாக ராசி மணலில் அணை கட்டலாம் என்று நமது விவசாயிகளை சொல்ல வைத்துள்ளனர். ராசி மணலில் அணை கட்ட வேண்டும் என்று கூறும் அமைப்புகள் அத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்.
ராசி மணல் சமவெளி பகுதி, இங்கு அணை கட்டி தண்ணீரை சேமிக்க முடியாது. இங்கு அணை கட்டுவது கர்நாடக அரசுக்கு சாதகமானது. இது மிகப்பெரிய சூழ்ச்சி. எனவே, இத்திட்டத்தை கைவிட வேண்டும். மேலும், தனியாரிடம் வேளாண் காப்பீடு திட்டத்தை வழங்கக்கூடாது. தமிழ்நாடு அரசே எடுத்து செயல்படுத்த வேண்டும்” இவ்வாறு மணியரசன் கூறினார்.
ராசி மணலில் அணை கட்ட வேண்டும் என்று பிஆர் பாண்டியன் தலைமையில் செயல்படும் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: காமராஜர் கைகாட்டிய இடம்.. ராசிமணல் பகுதியில் அணை கட்டினால் என்ன பயன்?