சென்னை: துரைப்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திருநங்கை.., தாம்பரம் அருகே சட்ட விரோத லாட்டரி விற்பனையில் ஈடுபடும் நபர்களின் மீது புகார்.., தனியார் ரிசார்ட்டில் திருமணத்திற்காக வைத்திருந்த 12 சவரன் தங்கம் மற்றும் வைரம் நகைகளை திருடிய கொள்ளையன் குறித்த குற்ற சம்பவங்களை காண்போம்..
சென்னை, அடையார் இந்திராநகர் 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்த முரளி. இவர் குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 5ம் தேதி அன்று ஆனந்த முரளியின் மகள் திருமணதத்தையொட்டி, நீலாங்கரை பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில், அவரது குடும்பத்தினர் அனைவரும் அந்த ரிசார்ட்டில் தங்கி இருந்துள்ளனர்.
மாயமான 12 சவரன் தங்க நகைகள்
இதையடுத்து, திருமணத்திற்கு மணப்பெண்ணிற்கு அணிவிப்பதற்காக சுமார் 12 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள், 3 லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை வைத்திருந்தனர். இந்த நிலையில், திடீரென மணப்பெண் அறையில் வைத்திருந்த நகைகள் காணாமல் போகி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மணப்பெண் அறைக்குள் சென்ற சிலர் நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து ஆனந்த முரளி நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி கேமரா காட்சிகளை பறிமுதல் செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து, சிசிடிவி காட்சிகளை வைத்து திருச்சி மாவட்டம், கல்லுக்குடி கிராமத்தைச் சேர்ந்த சுதர்சன் (31) என்பவரை தனிப்படை போலீசார் சென்னையில் வைத்து கைது செய்தனர். அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து அவரிடம் இருந்து 12 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏற்கனவே சுதர்சன் மீது ஐந்து குற்ற வழக்குகள் இருப்பதும், இவர் எம்பிஏ பட்டதாரி என்பதும் நீலாங்கரை பகுதியில் தங்கும் விடுதி நடத்தி வருவதும் தெரிய வந்தது. மேலும் சுதர்சன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ரிசார்ட்டில் திருமணம் நடைபெற இருப்பதால், நகைகளை கொள்ளை அடிக்கலாம் என திட்டம் தீட்டி நகைகளை திருடியதும் தெரிய வந்தது. சுதர்சனை விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திருநங்கை
சென்னை, துரைப்பாக்கம் பகுதியில் 40 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் அவரது வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியில் நின்று கொண்டிருந்த திருநங்கை ஒருவர் அந்தப் பெண்ணின் தலை முடியை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சடைந்த அந்தப் பெண் திருநங்கையை தாக்க முற்பட்டபோது, அந்தப் பெண்ணை கீழே தள்ளி திருநங்கை அடித்து அங்கிருந்து கற்களை கொண்டு அந்தப் பெண் மீது அடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.
இது குறித்து, அந்தப் பெண் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் அந்த திருநங்கை மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், துரைப்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து திருநங்கையை தேடி வந்தனர். இந்த நிலையில், கண்ணகி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் அனாமிகா (23) என்ற திருநங்கையை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவரைக் காவல் நிலையம் அமைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது, அவர் பெயர் அஜித் என்கிற அனாமிகா என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தாம்பரம் அருகே சட்டவிரோத லாட்டரி விற்பனை?
தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனையால் பல குடும்பங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு லாட்டரி சூதாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது. இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து ஆங்காங்கே சட்ட விரோதமாக சிலர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வருவதும் அவர்களை போலீசார் கைது செய்து வருவதும் தொடர் கதையாகி வருகிறது.
அந்த வகையில், சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், குரோம்பேட்டை பகுதிகளில் சிலர் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனையில் ஈடுபடுவதாக வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. அதில் மூன்று நம்பர் லாட்டரி, நான்கு நம்பர் லாட்டரிகளை விற்பனை செய்து நாள் ஒன்றுக்கு லட்ச கணக்கில் வருமானம் ஈட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இதில் ஆட்டோ ஓட்டுபவர்கள், கூலி வேலை செய்பவர்கள், கட்டிட வேலை செய்பவர்கள் என பலர் இந்த லாட்டரி சீட்டுகளை வாங்குவதாகவும் இதில் குலுக்கல் முறையில் ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை பம்பர் பிரைஸ் விழும் என கூறுவதால் பலர் ஆசை வார்த்தைகளை நம்பி லாட்டரி சீட்டுகளை பணம் கொடுத்து வாங்கி செல்வதாகவும் கூறப்படுகிறது.
எனவே கூலி வேலை செய்து வரும் நபர்கள் தொடர்ந்து இதுபோன்று லாட்டரி சீட்டுகளை வாங்கி ஏமாந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும், உடனடியாக தாம்பரம் மாநகர காவல் துறையினர் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனையில் ஈடுபடும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தியாளர் தாம்பரம் காவல்துறையை தொடர்புகொண்டு கேட்டபோது, '' லாட்டரி விற்பனை தொடர்பாக புகார்கள் வந்துள்ளதாகவும், அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்'' எனவும் தெரிவித்துள்ளனர்.