தஞ்சாவூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில், இந்தியா கூட்டணியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், “ஜனநாயகத்தில் கடுகளவும் நம்பிக்கையற்ற சக்திகளை நிராகரிப்பதற்கு, யுத்த களத்தில் நின்று கொண்டிருக்கிறோம். அரசியல் என்ற மகத்தான ஆயுதம் மற்றும் அமைப்பு பலம் எங்களிடத்தில் இருக்கிறது. எதிர் தரப்பில் அமைப்பு பலமும் இன்றி, ஆயுதமின்றி நிராயுதபாணியாக நின்று கொண்டிருக்கிறார்கள்.
பிரதமர் தமிழ்நாட்டிற்கு வரும் ஒவ்வொரு முறையும், இந்தியா கூட்டணியின் வாக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும், குறிப்பாக மீனவர்கள் தொடர்ந்து அந்தக் கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள்.
பிரதமர் மோடி 10 ஆண்டு காலமாக ஆட்சியில் இருக்கிறார். இலங்கை இந்தியாவின் நேச நாடு, நட்பு நாடு. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, இந்திய அரசாங்கம் முழு உதவி செய்தது. ஆனால், தற்போது இந்திய அரசாங்கம் இலங்கை அரசுக்கு குறைந்தபட்சம் கடிதம் கூட எழுதவில்லை.
மத்திய அமைச்சர் அமித்ஷா, அமலாக்கத் துறைக்கும், வருமானவரித் துறைக்கும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை எவராலும் மறுக்க முடியாது. எதிர்கட்சிகள் இல்லாத இந்தியாவை பிரதமர் மோடி விரும்புகிறார். தேர்தலில் எதிர்த்து நிற்கிற ஒரு கூட்டணி நள்ளிரவு கூட்டணி, இன்னொன்று கள்ளக் கூட்டணி பாமக. ஒன்றிய அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்த கட்சி அதிமுக.
நடைபெறக்கூடிய இந்த தேர்தல் ஒரு யுத்தம். நாடு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக இரண்டாவது விடுதலைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். அரசியலமைப்புச் சட்டம் காக்கப்பட வேண்டும். இந்த அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கி அடித்து விட்டு, மனுதர்ம அரசாட்சி நடத்துவதற்கு மோடி முயற்சிகளை மேற்கொள்கிறார். அதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். உயிரைக் கொடுத்தும் தேசத்தைக் காப்பாற்றுவோம்" என்றார்.
இப்பிரச்சாரத்தில், திமுக எம்எல்ஏ நீலமேகம், மேயர் இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் உத்திராபதி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி.. பெண்ணை கடித்ததால் பரபரப்பு - வெளியான சிசிடிவியால் மக்கள் அச்சம்! - Bear Attack In Tirunelveli