தஞ்சாவூர்: அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அரசு நாடாளுமன்றக் குழு கூட்ட விசாரணைக்கு உத்தரவிட கோரியும், ஆண்டுக்கணக்கில் தொடரும் மணிப்பூர் கலவரம் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்க கோரியும், உணவு, தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான விலை உயர்வு மற்றும் பெருகிவரும் வேலையில்லா திண்டாட்டத்தை தடுக்க தவறியதைக் கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு தஞ்சை வடக்கு மாவட்ட சிபிஐ சார்பில் மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி தலைமையில் நடைபெற்ற முழக்க கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மாநிலக்குழு உறுப்பினர் வை.சிவப்புண்ணியம், முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்ட மாநில, மாவட்ட, மாநகர், ஒன்றிய நிர்வாகிகள் பலரும் கொடி மற்றும் பதாகைகள் ஏந்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இரா.முத்தரசன், "மழை, வெள்ளம் காலங்களில் காவிரி டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஓலை குடிசை வீடுகள் இருப்பதால் அவை அதிகம் பாதிக்கப்படுகிறது. இதற்கு அவ்வப்போது ரூ.1000, 2000 என இழப்பீடு வழங்குவது நிரந்தர தீர்வாக அமையாது.
மாறாக, அவர்களுக்கு மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் கான்கிரீட் வீடுகளாக மாற்றி கட்டித்தர வேண்டும். அதுவே, நிரந்தர தீர்வாக அமையும். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்திட வேண்டும்.
மழை வெள்ளத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.5 லட்சம் என்பதனை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17,500 என்ற இழப்பீட்டினை ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் என உயர்த்தி வழங்கிட வேண்டும்.
இதையும் படிங்க : 'சாத்தனூர் அணையை திறந்ததால் பெருமளவு பாதிப்பு'.. அப்போ செம்பரம்பாக்கம் என்னாச்சு..? அனல் பறந்த விவாதம்..!
இத்தகைய பேரிடர் காலங்களில் மத்திய அரசின் பங்களிப்பு என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. காரணம் கடந்த முறை உயர்மட்டக்குழு வந்தது, பார்வையிட்டது, சென்றது. ஆனால், ஒரு பைசா கூட வழங்கவில்லை. தற்போது தமிழக முதலமைச்சர் கோரியுள்ள ரூ.2000 கோடியை மத்திய அரசு வழங்கிட முன்வர வேண்டும்.
வேங்கை வயல் பிரச்சனை தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு, வேங்கை வயலா? எப்போது? அது பழைய விஷயம். ரொம்ப நாள் ஆச்சே, விசாரணை நடைபெற்று வருகிறது. மதுரையில் டங்ஸ்டன் தொழிற்சாலை அமைக்க, மாநில அரசின் ஒப்புதல் இன்றி மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை எதிர்த்து சட்டமன்றத்தில் அரசு நிறைவேற்றிய தனித்தீர்மானத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், அந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
கும்பகோணத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில், நாட்டின் அரசியல் நிலைமை மற்றும் தமிழக அரசியல் நிலைமை குறித்து விவாதிக்கப்படும். பல முக்கிய அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
வரும் டிச 26ம் தேதி கட்சியின் நூற்றாண்டு விழாவும், விடுதலை போராட்ட வீரரும், தகைசால் விருது பெற்ற நல்ல கண்ணுவின் நூற்றாண்டு விழாவும் தொடங்குகிறது. இதனை மிகுந்த எழுச்சியோடு கொண்டாட கட்சி முடிவு செய்துள்ளது" என தெரிவித்தார்.