தஞ்சாவூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இன்று கும்பகோணத்திற்கு வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை தூர்தர்சன் விழாவில் கலந்து கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது ஒரு வரியை தவிர்த்து விட்டு பாடிய செயல் எதிர்பாராமல் நடந்தது அல்ல.
இதற்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும். மேலும், ஆர்.என்.ரவியை குடியரசுத் தலைவரும், மத்திய அரசும் பணி நீக்கம் செய்ய வேண்டும் அல்லது அவரை தமிழகத்தில் இருந்து விடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், நேற்று தமிழ் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் பேசுகையில், “இந்தி கற்காவிட்டால் தமிழகம் தனித்து போகும். இந்தியை கற்று இந்தியாவுடன் இணைந்து போக வேண்டும்" என்ற ரீதியில் பேசியுள்ளார்.
ஒருபோதும் இந்தி கற்காததால் தமிழகமும் தனித்து போகாது, தமிழக மாணவர்களும் தனித்து போக மாட்டார்கள். இந்தி கற்றவர்கள் பெரிய அளவிற்கு முன்னேறியுள்ளனர் என எந்தவொரு சான்றும் கிடையாது. ஆனால், தமிழ் கற்றவர்கள் தான் உயர் பொறுப்புகளுக்கு வந்து நாட்டிற்கு சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: "இந்தியாவின் வளர்ச்சிக்கு அரசு மட்டும் காரணமில்லை" -ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!
ஆளுநர் பதவி என்பது அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட உயர்ந்த பதவிகளில் ஒன்று, அதற்கு எற்றார் போல் அவர் நடந்து கொள்ள வேண்டும். திமுகவுடன் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எந்தவிதமான முரண்பாடும் இல்லை. அப்படி முரண்பாடு ஏற்பட வேண்டும் என்பது சிலரின் விருப்பம், ஆசை, கனவு. நேற்று இருந்ததைப் போல தான் இன்று இருக்கிறோம். இந்த அணி தொடரும், அணி மேலும் வலு பெற்றுள்ளது
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்து இருந்தோம். இதன் பின்னர் முதலமைச்சர் தலையிட்டு தொழிலாளர்கள் பிரச்னைக்கு சுமூகமான தீர்வை எட்டி இருக்கிறார். திமுகவினர் மத்திய அமைச்சராக இருந்த போதும் இந்தி மாதம் கொண்டாடப்பட்டுள்ளதே என மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்த கருத்து குறித்து கேட்ட போது, இந்தி மாதம் கொண்டாடுவதில் எந்தவித தவறும் இல்லை. இந்தி மொழிக்கு தரும் அதே அளவு முக்கியத்துவத்தை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து 22 மொழிகளுக்கும் கொடுங்கள் என்று தான் வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்தார்.