சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுரை மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலின் போது, திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு அளித்த தொகுதி இந்த முறையும் கொடுத்து பெரிய அளவில் சர்ச்சையின்றி தொகுதிப் பங்கீட்டை முடித்துள்ளது. மேலும், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது திமுகவுடன் கூட்டணியிலிருந்த ஐஜேகே (IJK) தற்போது கூட்டணியில் இருந்து விலகிய காரணத்தினால் அக்கட்சிக்கு வழங்கப்பட்ட தொகுதியிலும் இம்முறை திமுகவே போட்டியிட உள்ளது.
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த தேர்தலின் போது வழங்கப்பட்ட நாகையும், திருப்பூர் அல்லது தென்காசி ஆகிய 2 தொகுதிகள் இந்த முறை வழங்கப்படலாம் என்றும், அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த முறை வழங்கப்பட்ட கோவை மற்றும் மதுரை என அதே 2 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது, கோவை மற்றும் மதுரை தொகுதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. அதில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் பி.ஆர்.நடராஜனும், மதுரையில் சு.வெங்கடேசனும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தனர்.
அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தரப்பில் திருப்பூரில் கே.சுப்பராயன் மற்றும் நாகப்பட்டினம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்நிலையில், நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகள் குறித்த பட்டியல் திமுக இறுதி செய்துள்ளது.
அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒதுக்கப்பட்ட நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த தேர்தலின் போது போட்டியிட்ட மதுரை தொகுதியும், கோவைக்கு பதிலாக திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "பாஜகவுடன் கூட்டணி உறுதி.. அணிலைப் போல் உதவிகரமாக இருப்போம்" - டிடிவி தினகரன் பேட்டி!