புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை அருகே சங்கன் விடுதியில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. புகார் தொடர்பாக கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் விசாரணை நடத்தினார்.
நீர் தேக்க தொட்டியிலிருந்து தண்ணீரை ஆய்வுக்கு அனுப்பி மாட்டு சாணம் கலக்கப்பட்டது உறுதியானால் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள்ள நிலையில், தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணத்தை கரைத்த மர்ம நபர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள சங்கம்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட குருவாண்டான்தெரு பகுதியில் 30க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த சுமார் 10 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்ய 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு கடந்த 3 தினங்களாக வயிறு வலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் தொட்டியின் மேலே ஏறி பார்த்த நிலையில் நீரில் மாட்டு சாணம் கலக்கப்பட்டது தெரியவந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு புகார் அளித்தனர். புகார் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இதில், குடிநீர் தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை தூய்மைப்படுத்தி தர வேண்டும், அதேபோல் தங்கள் பகுதியில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
மக்களின் கோரிக்கையை ஏற்ற கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர், சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி தண்ணீரில் மாட்டு சாணம் கலந்தது உறுதியானால் கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை தூய்மைப்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். அதன் அடிப்படையில், மேல்நிலை நீர் தேக்க தொட்டி தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டிருந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவத்தில் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில் இது போன்று மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருப்பது புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சுட்டெரிக்கும் கோடை காலத்தை அணுக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன? மு.க.ஸ்டாலின் அறிக்கை! - Protection Of People From Summer