திருநெல்வேலி: நெல்லை பேட்டை தங்கம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதராஜ் (வயது 58). இவர் நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இளநிலை கட்டளை பணியாளராக உள்ளார். இந்நிலையில், நேற்று (ஜூன்.22) காலை வீட்டில் இருந்து பைக்கில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அப்போது, வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே சென்ற கொண்டிருந்துள்ளார். அங்கு 4 வழிச்சாலை பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, வாகனங்கள் ஒரே பாதையில் திருப்பி விடப்பட்டிருந்தது. அச்சாலையில், வேலாயுதராஜ் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் சண்டையிட்ட இரண்டு மாடுகள் சாலையின் குறுக்கே ஓடி வந்துள்ளது.
மேலும், மாடுகள் இருசக்கர வாகனத்தில் மோதியதால் நிலை தடுமாறிய வேலாயுதராஜ் சாலையில் கீழே விழுந்துள்ளார். அப்போது, நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து குமுளி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, வேலாயுதராஜ் மீது ஏறியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதனையடுத்து, தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர், வேலாயுதராஜ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனை மேற்கொள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான காவல்துறையினர், விபத்தால் அப்பகுதியில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் வகையில் சாலையின் மற்றொரு பகுதியையும் திறந்து விட்டனர்.
இதனிடையே, நெல்லையில் வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை பணிகள் சரியான திட்டமிடலின்றி நடைபெற்று வருவதாகவும், அதனால் அடிக்கடி விபத்து நடப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், மாநகரின் பல்வேறு பகுதிகளில் கால்நடைகள் சாலைகளில் திரிவதால் போக்குவரத்து நெரிசலும், பல இடங்களில் விபத்துகள் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.
குறிப்பாக, புறவழிச்சாலை பணிகள் விரைவில் முடிக்க வேண்டியும், சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை முன்வைக்கின்றனர். இந்த நிலையில் விபத்து நடந்த சிசிடிவி காட்சி வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, நெல்லை மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் படி மாநகர் பகுதிகளில் கேட்பாரற்ற நிலையில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பிடிக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாடுகளின் உரிமையாளர்களை கண்டறிந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பெரம்பூர் இருசக்கர வாகன விபத்து: பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!