திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 40,000 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் செலவு செய்து பருத்தி நன்றாக வளர்ந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த மழையின் காரணமாக, பருத்தி செடிகளில் உள்ள காய்கள் முழுவதுமாக கொட்டியுள்ளது.
இதன் காரணமாக, மிகப்பெரிய மகசூல் இழப்பை விவசாயிகள் சந்தித்துள்ளனர். இந்த நிலையில், மழை நீரை வடிய வைத்து மீண்டும் பருத்திக்கு உரம் அடித்து பருத்திச் செடிகளை நன்றாக வளர்த்து, தற்பொழுது பருத்தி பஞ்சு எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேநேரத்தில், திருவாரூர் மாவட்டம் கோட்டூர், ஓவர்சேரி, வேர்குடி இருள்நீக்கி, விக்கிரபாண்டியம் உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி பஞ்சினை ஒரு கிலோ 35 ரூபாய் முதல் 40 ரூபாய்க்கு தனியார் வியாபாரிகள் கொள்முதல் செய்வதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால் செலவு செய்த தொகை கூட எடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும், உடனடியாக தமிழக அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை திறந்து ஒரு கிலோ பருத்தியை 100 ரூபாய் விலை நிர்ணயம் செய்து விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், அப்படி செய்தால் தான் பருத்தி விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு நஷ்டம் இல்லாமல் இருக்கும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இல்லையென்றால், அடுத்தகட்ட சாகுபடி பணிகளை தொடங்குவதில் சிக்கல் ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: “மேட்டூரில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு குறைவு ” - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்!