சென்னை: தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸை கடந்துள்ளது. மேலும், அக்னி நட்சத்திரம் துவங்கிய நிலையில் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள வெளியில் செல்வதை மக்கள் தவிர்த்து வருகின்றனர்.
இதனிடையே புதுச்சேரி, கோவை போன்ற இடங்களில் வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் வகையில் மாநகராட்சி சார்பில், சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.
இந்த நிலையில் புதுச்சேரி, கோவையைத் தொடர்ந்து சென்னையிலும் பெருநகர மாநகராட்சி சார்பில், எட்டு முக்கிய சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோடை வெயில் அதிகரித்து வரும் வகையில், வாகன ஓட்டிகளுக்கு நிழல் தரும் வகையில் சென்னை மாநகராட்சி சாலையில் உள்ள 10 சிக்னல்களில், முதற்கட்டமாகப் பசுமை பந்தல் காவல்துறையின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது. வெயிலின் காரணமாக சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைய கூடாது என்பதற்காக இந்த பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மிகவும் பாதுகாப்பான முறையில் இந்த பசுமைப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் தேவை ஏற்படும் பட்சத்தில் கூடுதல் இடங்களில் இந்த பந்தல் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக ஈ.வெ.ரா பெரியார் சாலை, ராஜா முத்தையா சாலை சந்திப்பு உள்பட 10 இடங்களில் 6 மீட்டர் நீளம் மற்றும் 5.5 மீட்டர் உயரத்தில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பசுமை பந்தல் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றால், மழைக்காலங்களிலும் உதவும் வகையில் பந்தல்கள் அமைக்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது குறித்து சென்னையில் வாகன ஓட்டிகள், ஈடிவி பாரத்திடம் கூறுகையில், ” மக்களின் நலன் கருதி புதுவிதமான முயற்சியை மேற்கொண்டுள்ளனர். வெயிலுக்கு ஆறுதலாக உள்ளது. இவற்றை அனைத்து இடங்களிலும் செயல்படுத்தினால் நன்றாக இருக்கும். சிகன்லில் நிற்கும் 10 முதல் 15 நிமிடங்களில் மக்களுக்கு உதவியாக உள்ளது.
தண்ணீர்ப் பந்தல் மற்றும் மோர் பந்தல் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய வெயிலுக்கு முகவும் உகந்ததாக இருக்கும். குழந்தைகளுடன் வரும்போது வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள உதவியாக உள்ளது. மேலும், பசுமை பந்தல் திட்டத்தைச் சென்னை முழுவதும் செயல்படுத்த வேண்டும்” என கோரிக்கையும் வைத்தனர்.
இதையும் படிங்க: கராத்தேவில் பிளாக் பெல்ட்.. நெல்லை ஜெயக்குமார் பற்றி வெளியான ரகசியம்! - Who Is Nellai Jayakumar