கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சியில் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ.14,500 வழங்கப்படுகிறது. இந்த நிலையில், தீபாவளி போனஸாக ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அதிகார குரல் கூட்டமைப்பைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் நேற்று கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இன்று 2வது நாளாக சுமார் 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் மேற்கொண்ட அவர்கள், மாநகராட்சி ஆணையாளரை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைக்கு தீர்வு கண்டுவிட்டுத் தான் செல்வோம் என தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, ரூ.2000 தான் போனஸ் என்று கூறி தருவதாகவும், இது எப்படி எங்களுக்கு போதும் என கேள்வி எழுப்பியுள்ள அவர்கள், தங்களுக்கு ஒரு மாத சம்பளத்தை போனஸாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனிடையே மாநகராட்சி துணை ஆணையாளர் சிவக்குமார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தீர்வு காணாமல் செல்ல மாட்டோம் என்று கூறி போராட்டத்தைத் தொடர்ந்துள்ளனர்.
மேலும், போனஸ் குறித்து ஒப்பந்ததாரரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், பண்டிகை காலங்களில் இது போன்று மறியல் போன்றவற்றில் ஈடுபட வேண்டாம் என்று துணை ஆணையாளர் கூறிய நிலையில் அமைதியான வழியில் தான் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருவதாகவும், அதனால் தங்களை திசை திருப்ப வேண்டாம் என்றும் துணை ஆணையாளரிடம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தூய்மைப் பணியாளர்கள், "தங்களால் தான் கோவை மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சி என்று பெயர் கிடைத்துள்ளது. ஆனால், தங்களுக்கு பண்டிகை காலங்களில் கூட போனஸ் வழங்குவதில்லை. மேலும், ஒவ்வொரு வருடமும் பண்டிகையின் முந்தைய நாள், தாங்கள் கடன் வாங்கி குழந்தைகளுக்குப் புத்தாடைகள் வாங்கி வருவதாகவும் கூறிய அவர்கள், தூய்மை பணியாளர்களை பாராட்டும் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பாராட்டினால் மட்டும் போதுமா? தங்களை நிரந்தரமாக்கி உரியச் சம்பளம் வழங்க வேண்டும்" என வலியுறுத்தினர்.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17-10-2024/22698196_p.jpg)
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்