திருநெல்வேலி: நெல்லை மாநகரம் சிந்துபூந்துரையைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் இவர் நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் ( The District Consumer Disputes Redressal Commission) வழக்கறிஞர் பிரம்மநாயகம் உதவியுடன் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவர் தாக்கல் செய்த மனுவில் கடந்த 05.06.2023 அன்று சென்னை வடபழனியில் உள்ள ஃபோரம் விஜயா மாலில் (Forum Vijaya Mall) இருக்கும் பிவிஆர் பேலசோ (PVR Palazzo) திரையரங்கிற்கு திரைப்படம் பார்க்கச் சென்றதாகவும், அப்போது இடைவேளையில் திரையரங்கோடு இணைக்கப்பட்டிருந்த கேன்டீனில் ரூ.160 ரூபாய் செலுத்தி காஃபி வாங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் காஃபி குடிக்கத் தகுதியற்ற வகையில் கெட்டுப்போன நிலையில் இருந்ததாகவும், இதனை மாற்றித் தருமாறு திரையரங்கு நிர்வாகத்திடம் முறையிட்டதாக சுப்பிரமணியன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஊழியர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக தனது மனுவில் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சிவசுப்பிரமணியனின் மனுவில் கீழ்க் கண்டவற்றை குறைபாடாக சுட்டிக்காட்டியுள்ளார்.
- ரூ.160 வாங்கிவிட்டு கெட்டுப்போன காஃபியை கொடுத்துள்ளனர். இது அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தின்படி தெளிவாகிறது.
- காஃபியின் அளவு குறித்து பில்லில் எதுவும் தெரிவிக்கப்பவில்லை இதுவும் சேவைக்குறைபாடு என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
- சேவைக்குறைபாட்டை காரணம் காட்டி ரூ.50,000 நஷ்ட ஈடு வழங்கக் கோரி அனுப்பிய வழக்கறிஞர் நோட்டீசையும் திரையரங்க நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை.
சிவசுப்பிரமணியனின் வழக்கை விசாரித்த ஆணைய நீதிபதி பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனக சபாபதி ஆகியோர் சிவசுப்பிரமணியனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ.7000ம் மற்றும் வழக்கு செலவு ரூ.3000ம் சேர்த்து மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் ஒரு மாத காலத்திற்கு வழங்க வேண்டும் என்றும் தவறினால் 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். (Order No. CC/173/2023)
இது குறித்து சிவசுப்பிரமணியன் ஈடிவி பாரத்திடம் பேசுகையில், "சம்பந்தப்பட்ட திரையரங்கில் காபி வாங்கி குடித்த போது முழுமையாக கெட்டுப் போயிருந்தது. எனவே அதை மாற்றி தரும்படி உடனே கேட்டேன் அதற்கு அவர்கள் மறுத்து விட்டார்கள். மிகுந்த மன வேதனையில் வழக்கு தொடுத்தேன் தற்போது எனக்கு நியாயம் கிடைத்துள்ளது.
இது சாமானிய மக்களுக்கான வெற்றி. இது போன்று பல திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை விட தின்பண்டங்கள் விலை அதிகளவு விற்கிறார்கள். ஆனால் அவற்றின் தரம் முறையாக இருப்பதில்லை எனவே மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க: ஊறுகாய்க்கு ரூ.35,000 அபராதம்! விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!