சென்னை: கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கியுள்ள 1000 மக்களுக்குத் தேவையான ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் 100 செல்போன்கள் அடங்கிய நலத்திட்ட பொருட்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக, வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா ஏற்பாட்டில் அனுப்பிவைத்தனா். இதனை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது, “ கேரளா வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முன்னதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ரூ.1 கோடி அறிவித்துள்ளோம். அதனை வருகிற 8 ஆம் தேதி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியிடம் தர உள்ளோம்.
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட ஐந்து மணி நேரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து முதல் கட்டமாக 50 பேர்களை களப்பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து, தங்களது ஒரு மாத சம்பளத்தை வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேரிடர் நிவாரண நிதிக்காக ராகுல் காந்தியிடம் வழங்க உள்ளோம்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிகேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்த்தால் தான் அதிசயம். அவர் பார்க்கவில்லை என்றால் அது எதார்த்தம். மணிப்பூர் கலவரம் ஏற்பட்டு ஒரு வருடம் ஆகியும் இதுவரை அங்கு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பிரதமர் பார்க்கவில்லை. ஆனால், ராகுல் காந்தி கேரளாவிற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தருவோம் என்று கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு தென்னிந்தியாவில் ஆந்திராவை மட்டுமே பிடிக்கும். ஏனென்றால் ஆந்திரா அரசு மத்திய அரசுக்கு முட்டு கொடுத்து வருகிறது. ஆட்சியின் சுவாச காற்றை ஈட்டு கொண்டிருக்கிறது. ஆகையால் ஆந்திராவிற்கு எவ்வளவு நிதி வேணுமானாலும் கொடுப்பார். இதுதான் பாசிசம். திரை நடிகர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: வீட்டு கிணற்றில் இறங்கிய இருவர் உயிரிழப்பு.. விஷவாயு தாக்கி மரணமா? - தூத்துக்குடியில் நடந்தது என்ன?