சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பல்வேறு துறைகள் மீதான மானிய கோரிக்கை குறித்த விவாதம் ஜூன் 20 முதல் தொடங்கி நடைபெற்றது. அந்த வகையில், இன்று (சனிக்கிழமை) மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
இக்கூட்டத்தொடர் முடிவுற்றுள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கூட்டத் தொடர் சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு நல்லத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளது வரவேற்கத்தக்கது. ராகுல் காந்தி நேற்று பேசுகையில் மைக் ஆஃப் செய்யப்பட்டதாக தகவல் வருகிறது.
பாஜக ஆட்சியில் எப்போதும் ஜனநாயக உரிமை மறுக்கப்படுவது எதார்த்தமானது. அதன் தொடர்ச்சியாக தான் மைக் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்திற்கு நேர்மாறாக, எதிராக செயல்படுகின்ற செயல். இதனை பாஜக மாற்றிக்கொள்ள வேண்டும். பாஜக ஆட்சி என்று இல்லாமல் கூட்டணி ஆட்சி என்று இருக்கும் பொழுது, பாஜக தனது போக்கை மாற்றவில்லை என்றால் நல்ல தீர்ப்புகளை மக்கள் அளிப்பார்கள்” என்றார்.
சட்டசபை குறைவான நாள் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “இதற்கு முன்னதாக இருந்த ஆட்சியில் 2 நாட்கள் சட்டசபை நடந்துள்ளது” என தெரிவித்தார். நல்ல தலைவர்கள் வேண்டும் என தவெக தலைவர் விஜய் கூறியது குறித்த கேள்விக்கு, “நல்ல தலைவர்கள் இல்லை என கூற முடியாது. நல்ல தலைவர்களும் உள்ளனர். அவைவரும் கெட்ட தலைவர்கள் என்று கூற முடியாது.
கண்ணுக்கு தெரியாத கதாநாயகனாக அமைதியாக பணிகள் செய்யும் தலைவர்களும் தமிழ்நாட்டில் பார்க்க முடியும். ஆர்.நல்லகண்ணு போன்ற நல்ல தலைவர்களும் இப்போதும் உள்ளார்கள். நடிகர் விஜய் ஒரு கட்சி தலைவராக அவருடைய கருத்து கூறுவதற்கு அவருக்கு உரிமை உள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: பட்டியலின பேராசிரியைக்கு துறைத்தலைவர் பதவி வழங்க மறுப்பா? - சேலம் பெரியார் பல்கலையில் புதிய சர்ச்சை!