திருநெல்வேலி: திருநெல்வேலியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவரும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவருமான செல்வப்பெருந்தகை தலைமையிலான குழு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று, புதன்கிழமை (நவ.20) ஆய்வு நடத்தியுள்ளனர். இதில், மாவட்ட ஆட்சியர், எம்.பி சி.ராபர்ட் புரூஸ், மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக்கணக்குக் குழு (2024-2025) ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், செல்வப்பெருந்தகை கலந்துக்கொண்டு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து தேவையான பரிந்துரைகளை வழங்கியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக்கணக்குக் குழு (2024-2025) ஆய்வுக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
— Selvaperunthagai K (@SPK_TNCC) November 20, 2024
ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சி.ராபர்ட் புரூஸ்… pic.twitter.com/J9qbscJaa6
அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து செல்வப்பெருந்தகை பேசியதாவது, “நெல்லை நாங்குநேரியில், திமுக ஆட்சியில், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் தொழில் பூங்கா அமைக்கப்பட்டது. அதை எடுத்து நடத்திய நிறுவனம் செய்த மோசடி விவகாரம் தொடர்பாக இத்திட்டம் கைவிடப்பட்டது.
இதனையடுத்து, அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 1400 ஏக்கர் நிலத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். தொழில்துறை செயலாளரிடம், நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது. இதற்கு 6 மாத காலங்களுக்குள் முடிவுக்கு கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதா?" பல்டி அடித்த செல்வப்பெருந்தகை அறிக்கை!
நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் வெள்ளநீர் கால்வாய் திட்டம் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று தெரிவித்த நிலையில், பெருவெள்ள பாதிப்புகளின் காரணமாக காலதாமதம் ஏற்பட்டுள்ளது. வருகிற மார்ச் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவர பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது.
தாமிரபரணி : மாசடைந்து வரும் தாமிரபரணி ஆற்றில், கழிவுநீர் கலக்காமல் தடுப்பு நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து தாமிரபரணி ஆற்றை பாதுகாப்பது தமிழர்களின் தலையாய கடமை. கழிவுநீர் கலப்பு தடுப்பு நடவடிக்கை சென்னையில் சாத்தியமாகியுள்ளது போன்று நெல்லையிலும் அத்திட்டம் சாத்தியம். தாமிரபரணி நதியை பாதுகாக்க சிறப்பு திட்டத்தை தீட்ட வேண்டும். தமிழர்களின் அடையாளம் தாமிரபரணி” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த பொதுக் கணக்குக் குழுவின் உறுப்பினர்களான போரூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரிகிருஷ்ணமூர்த், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன், பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர் உள்ளிட்டோர், நாங்குநேரி பகுதியில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலம், நெல்லை சந்திப்பு பகுதியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் மற்றும் வ.உ.சி படித்த பள்ளிக்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் கட்டப்பட்ட கட்டிடங்கள், தாமிரபரணி ஆறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கணக்கு விவரங்களை ஆய்வு செய்து கேட்டறிந்துள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்