சென்னை: 2024 நீட் தேர்வு முடிவுகளில் நடந்துள்ள முறைக்கேடுகள், வினாத்தாள் கசிவு, மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்கியதில் முறைகேடுகள் போன்ற காரணங்களுக்காக மத்திய பாஜக அரசை கண்டித்தும் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உரிய நியாயம் வழங்கக் கோரியும் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக சென்னை கடற்கரை சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஸ்குமார், முன்னாள் மாநில தலைவர் கேவி தங்கபாலு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜய் வசந்த், சுதா ராமகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகர், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நீட் தேர்வில் முறைகேடுகள் செய்து மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்ட மேடையில் பேசிய கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், “நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் பல்வேறு ஊழல் முறைகேடுகள் நடந்திருப்பதாக நமக்கு தெரியும் என்றும் இதை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஏனெனில் இந்த நீட் தேர்வின் மூலம் பல்வேறு மாணவர்களின் கனவுகள் வீணாகி உள்ளதாகவும், பல்வேறு மாணவர்களின் எதிர்காலம் கேள்வி கூறியாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மோடி அரசு ஊழல் செய்யாத இடமே இல்லை என்றும் தற்போது கல்வி துறையிலும் தங்களது வேலையை காட்ட தொடங்கி விட்டனர் என்றும் குற்றம் சாட்டினார்."
இதனை தொடர்ந்து கண்டன உரை நிகழ்த்திய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, "தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு முறை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு திராவிட கழகம், காங்கிரஸ் கட்சி என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பல கட்டங்களாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது எனவும் தெரிவித்தார்."
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வ பெருந்தகை," நீட் தேர்வை ஒருபோதும் காங்கிரஸ் ஆதரிக்கவில்லை என்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வை அனுமதிக்கவில்லை எனவும் அதற்கு பின் வந்தவர்கள் தான் நீட் தேர்வை அனுமதித்தார்கள் என சுட்டிக்காட்டினார். கள்ளக்குறிச்சி விவகாரத்தை பொருத்தவரை யாரோ ஒருவர் செய்த தவறுக்காக அரசையோ முதல்வரையோ பொறுப்பேற்க வேண்டும் எனக்கூறுவது தவறு என்றும் கள்ளக்குறிச்சி விவகாரத்தை பொருத்தவரை காங்கிரஸ் கட்சி வாய்மூடி மௌனமாக இல்லை எனவும் எந்தெந்த இடங்களில் எதிர்க்க வேண்டுமோ அந்தந்த இடங்கள் எல்லாம் எதிர்க்கிறோம் எனவும் தெரிவித்தார்."
இதையும் படிங்க: நீட் மறுதேர்வுக்கு தடை விதிக்க முடியாது.. மருத்துவ கலந்தாய்வை தள்ளிவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!