திருச்சி: திருச்சி மாவட்ட டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில், மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்தும், திருச்சி மாவட்ட காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய பாஜக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த திருநாவுக்கரசர் எம்.பி பேசுகையில், “பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்துள்ளார். இதுவரை தமிழ்நாட்டிற்கு எந்த புதிய திட்டத்தையும் அவர் செயல்படுத்தவில்லை. பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மேடையில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிய நிதியைவிட, பாஜக அரசு 3 மடங்கு அதிகமாக நிதி வழங்கி உள்ளது எனக் கூறுகிறார், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
தமிழ்நாட்டில் வெள்ள நிவாரண நிதியாக 4,000 கோடி ரூபாய் மத்திய அரசிடம் கேட்டு, இதுவரை வழங்கவில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். இதற்கு பிரதமர் பதில் சொல்லட்டும், நிதியை ஒதுக்கட்டும், மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள், அவற்றைத் தடுக்கவில்லை. முதலில் சிறையில் இருக்கக்கூடிய மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இதை எதையும் செய்யாத கையாளாகாத அரசாகத்தான் பாஜக செயல்படுகிறது” என்றார்.
இதனையடுத்து திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக அல்லது மதிமுகவிற்கு சீட் கொடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், 'உங்களுக்கு யார் சொன்னது, பொய்யான தகவலைப் பரப்பாதீர்கள்.
தேர்தல் நேரத்தில் கூட்டணி பேச்சு வார்த்தையின்போது, அனைத்து கட்சிகளும் தங்களுக்கு விருப்பமான தொகுதிகளை கேட்டுப் பெறுவார்கள், அது வழக்கம்தான். தற்போது திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் எம்.பி ஆக நான் உள்ளேன். அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். ஆகவே, நான் மீண்டும் திருச்சி தொகுதியைக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்” எனத் தெரிவித்தார்.
நிருபர்களிடம் ஆவேசம்: திருச்சி மாநகரில் எங்கள் தொகுதி எம்பி காணவில்லை, கண்டால் வர சொல்லுங்கள்’ என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது, இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “நீ யாரிடமோ காசு வாங்கிக் கொண்டு இப்படிக் கேட்கிறாய். நீ என்ன பெரிய யோக்கியனா? உனக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. சீமான் மாதிரி கெட்ட வார்த்தையில் பேசினால்தான் நீயெல்லாம் அடங்குவாய்” என காட்டமாகப் பதிலளித்தார்.
இதனைத் தொடர்ந்து, மற்றொரு செய்தியாளர், திருநாவுக்கரசர் விரைவில் பாஜகவில் இணைய உள்ளார் என்ற தகவல்கள் பரவி வருவது குறித்து உங்கள் கருத்து என்ன எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் அளித்த அவர், அப்படிச் சொல்பவன் எவனாக இருந்தாலும் செருப்பால் அடிப்பேன், இதுபோன்று தகவல்களை பரப்புபவர்களிடம் சீமானைப் போன்றுதான் பேச வேண்டும். இனி நானும் சீமானைப் போன்று பேசப் போகிறேன். இந்த கேள்வியை முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேளுங்கள்” என்று ஆவேசமாகப் பேசி பேட்டியை பாதியில் முடித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: அதிமுக மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் மனு; ஏ.வி.ராஜுக்கு இடைக்காலத் தடை!