திருநெல்வேலி: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மாயமான நிலையில், இன்று அவரது தோட்டத்தில் பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தனது தந்தையைக் காணவில்லை என ஜெயக்குமாரின் மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இன்று அவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயக்குமாரின் உடலைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கூடத்தில் ஜெயக்குமார் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. இதனை அடுத்து, முன்னாள் காங்கிரஸ் எம்.பி ராமசுப்பு மற்றும் அவரது உறவினர்கள் ஜெயகுமாரின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, ஜெயக்குமாரின் உடல் பிரேதப் பரிசோதனை அறையின் குளிரூட்டும் அறையில் வைக்கப்பட்டது. நாளை (மே 5) காலை ஜெயக்குமார் உடலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து நல்லடக்கம் செய்வதற்காக மகன் உட்பட உறவினர்கள் பெற்றுச் செல்வதாக தெரிவித்துள்ளனர். மேலும், காலை 10 மணிக்கு கரைசுத்து புதூர் கிராமத்தில் ஜெயக்குமார் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக ஜெயக்குமாரின் குடும்பத்தினர் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்: நெல்லை மாநகர் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மரணத்திற்கு நீதி கேட்டும் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி நெல்லை மாநகர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில், காங்கிரஸ் அலுவலகம் முன்பு உள்ள எஸ்.என். ஹை ரோடு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மரணத்திற்கு நீதி வேண்டும். உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். பின்னர், காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: திருப்பூரில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை; 8 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது! - TIRUPPUR Minor Girl Sexual Abuse