மதுரை: மதுரை தல்லாகுளம் மாநகராட்சி அலுவலகத்தில் அறிஞர் அண்ணா மாளிகையில், மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் இந்திராணி பொன் வசந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த மாமன்றக் கூட்டத்தில் மதுரை மாநகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 வார்டுகளின் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
அப்போது, கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்கள் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காததைக் கண்டித்தும், கண்களில் கருப்பு வெள்ளை நிற துணிகளை கட்டிக்கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும், தங்கள் கையில் வைத்திருந்த மத்திய அரசின் பட்ஜெட் அறிக்கையின் நகலை கிழித்து எரிந்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, திமுக கவுன்சிலர்கள் ஒரு சேர எழுந்து நின்று, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்நிலையில், மாமன்றக் கூட்டம் நடந்து கொண்டிருந்த வேளையில் காங்கிரஸ் மற்றும் திமுக கவுன்சிலர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி, பட்ஜெட் அறிக்கையை கிழித்து எரிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் மாமன்றக் கூட்டத்தில் சற்று நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "அனுராக் தாகூரின் பேச்சு அம்பேத்கரின் கருத்துக்களுக்கு எதிரானவை" - செல்வப்பெருந்தகை கண்டனம்!